கோவை : கோவை மாநகரில் சாலை விபத்துக்கள் நடைபெறாமல் தடுப்பதற்காக கோவை மாநகர காவல் துறை, மாவட்ட நிர்வாகம் மற்றும் நெடுஞ்சாலை துறையினருடன் இணைந்து பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த கால விபத்துக்கள் குறித்து கூர்ந்தாய்வு செய்ததில், அதிவேகமாகவும், அபாயகரமான முறையில் வாகனத்தை இயக்குவது அதிகப்படியான விபத்துகளுக்கு காரணம் என்பது புள்ளி விவரங்கள் மூலம் தெரிய வருகிறது. எனவே அதிவேகமாக வாகனத்தை இயக்குபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டு (2017 2018), ஆம் ஆண்டு சாலை பாதுகாப்பு நிதியின் மூலம் SPEED RADAR GUN பொருத்தும் திட்டத்திற்காக ரூபாய் 40 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அந்நிதியில் இருந்து வாகனங்களின் வேகத்தை கண்காணிப்பதற்காக 39,71,880/- செலவில் கோவை மாநகரில் அவிநாசி சாலை, சத்தியமங்கலம் சாலை, மற்றும் பாலக்காடு சாலைகளில், மூன்று இடங்களில் வேகத்தை கண்டறியும் தானியங்கி கருவி (Automatic Speed Radar Gun) நிறுவப்பட்டு கோவை மாநகர காவல் ஆணையாளர் திரு.பாலகிருஷ்ணன் ஐ.பி.எஸ், அவர்களால், (28/7/2023) ஆம் தேதி பயன்பாட்டிற்கு துவக்கி வைக்கப்பட்டது. இந்த கருவியின் மூலம் மேற்குறிப்பிட்ட கோவை மாநகர சாலைகளில் நிர்ணயிக்கப்பட்ட 40 கிலோமீட்டர் வேகத்தை விட அதிக வேகமாக செல்லும் வாகனங்களின் மீது தானாகவே வழக்குப்பதிவு செய்யும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் கோவை மாநகரில் மேற்படி சாலைகளில் வாகனங்களை இயக்கும்போது நிர்ணயிக்கப்பட்ட 40 கிலோமீட்டர் வேகத்தில் மட்டுமே வாகனங்களை இயக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. தவறும் பட்சத்தில் உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.
கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
A. கோகுல்