சென்னை: சாலை பாதுகாப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், நெடுஞ்சாலைத் துறையால் தயாரிக்கப்பட்ட கையேட்டை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: நல்ல சாலை கட்டமைப்புகளை ஏற்படுத்துவதில் தேசிய அளவில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. தமிழகத்தில் உள்ள சாலைகளின் மொத்த நீளம் 2.61 லட்சம் கி.மீ ஆகும். இவற்றில் நெடுஞ்சாலைத் துறையின் பராமரிப்பில் 70,556 கி.மீ. நீள சாலைகள் உள்ளன.
இவை தேசிய நெடுஞ்சாலைகள், மாநில நெடுஞ்சாலைகள், மாவட்ட முக்கிய சாலைகள் மற்றும்மாவட்ட இதர சாலைகள் என பல்வேறு பிரிவுகளாக பிரித்து பராமரிக்கப்பட்டு வருகின்றன. சாலை கட்டமைப்பு, அதன் விதிமுறைகள், சாலைக் குறியீடுகள்ஆகியவை குறித்து பொதுமக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லாததால் அதிக விபத்துகளும் உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன.
எனவே, சாலை பாதுகாப்பை மக்கள்இயக்கமாக மாற்றவும், விபத்தில்லா தமிழகத்தை உருவாக்கவும், பொதுமக்கள் சாலைகளை சரியான வகையில் பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கையேடு தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த கையேட்டை சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். இதில், வாகன வேகத்தின் தாக்கம்,உலக சுகாதார நிறுவனம், சாலைபோக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் சாலை விபத்து தொடர்பான புள்ளி விவரங்கள், விபத்துக்கான காரணங்கள், அதை தவிர்க்கும் வழிமுறைகள், சாலை விதிகள், பயணத்தில் கட்டாயம் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள், எச்சரிக்கை குறியீடுகள், வாகன பராமரிப்பு, முதலுதவி சேவை பற்றிய விளக்கங்கள் மற்றும்உதவி எண்கள் உள்ளிட்ட விவரங்கள் இடம்பெற்றுள்ளன.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர் எ.வ.வேலு, தலைமைச் செயலர் வெ.இறையன்பு, நெடுஞ்சாலைத் துறை செயலர் பிரதீப் யாதவ், இயக்குநர் பூ.இரா.குமார், நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலைய இயக்குநர் ரெ.கோதண்டராமன், கட்டுமானம் மற்றும் பராமரிப்பு தலைமைப் பொறியாளர் இரா.சந்திரசேகர், தேசிய நெடுஞ்சாலை தலைமைப் பொறியாளர் நா.பாலமுருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுஉள்ளது.