சென்னை : விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த சீனிவாசன் 25, மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பாலசுப்ரமணி 23. ஆகியோர் சென்னையிலுள்ள ஐ.டி. நிறுவனத்தில் மென்பொறியாளராக பணிபுரிந்து வருகின்றனர்.
கடந்த 19.9.2021 அன்று இரவு சீனிவாசன் மற்றும் பாலசுப்ரமணி ஆகியோர், குளோபல் மருத்துவமனை பிரதான சாலையில் சென்று கொண்டிருந்தபோது, சாலையோரத்தில் ஒரு துணியில் தங்க நகைகள் சுற்றி வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.
இருவரும் துணியால் சுற்றி வைக்கப்பட்டிருந்த தங்க நகைகளை அருகிலிருந்தவர்களிடம் காண்பித்தபோது, யாரும் உரிமை கோராததால், அந்த தங்க நகைகளை S-16 பெரும்பாக்கம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
S-16 பெரும்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் ஆய்வு செய்ததில், மேற்படி துணியில் சுமார் 5 சவரன் எடை கொண்ட தங்கச்சங்கிலி, பிரேஸ்லேட் மற்றும் 2 மோதிரங்கள் வைத்திருந்தது தெரியவந்தது. இந்நிலையில், பெரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்த நரேந்திரன் என்பவர் S-16 பெரும்பாக்கம் காவல் நிலையத்தில் ஆஜராகி, தான் 19.9.2021 அன்று மாலை கடற்கரையில் குளிப்பதற்காக அவரது 5 சவரன் எடை கொண்ட தங்கச்சங்கிலி, பிரேஸ்லேட் மற்றும் 2 மோதிரங்கள் ஆகிய தங்க நகைகளை கழற்றி துணியில் சுற்றி பாக்கெட்டில் வைத்திருந்ததாகவும்,
பின்னர் குளோபல் மருத்துவமனை பிரதான சாலையில் சென்றபோது, அவரது தங்க நகைகளை தவறவிட்டதாகவும் தெரிவித்தார். அதன்பேரில்,காவல் குழுவினர் விசாரணை செய்து, மேற்படி சுமார் 5 சவரன் தங்க நகைகள் நரேந்திரனிடம் ஒப்படைத்தனர்.
சாலையில் கிடந்த தங்க நகைகளை காவல் நிலையத்தில் ஒப்படைத்து உரியவரிடம் ஒப்படைக்க உதவிய சீனிவாசன் மற்றும் பாலசுப்ரமணி ஆகியோரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள் 07.10.2021 அன்று நேரில் அழைத்து பாராட்டி, வெகுமதி மற்றும் சான்றிதழ் வழங்கினார்.
சென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
அப்துல் ஹாபிஸ்