மதுரை : மதுரை வாடிப்பட்டி அருகே மேட்டுப்பட்டி கிராமத்தில் மத்திய சிறை அமைக்க நிலங்களை மீட்க வந்த போலீசார் மற்றும் வருவாய் துறை அதிகாரிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் மறியல். விவசாயிகளை குண்டு கட்டாக இழுத்து வந்து கைது செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே மேட்டுப்பட்டி கிராமத்தில், சுமார் 40 ஆண்டுகளாக சிறுமலை அடிவாரத்தில் உள்ள விவசாய நிலங்களில் போர்வெல் அமைத்து, அப்பகுதி விவசாயிகள் விவசாயம் செய்து வந்தனர். இந்த நிலங்களுக்கு பல ஆண்டுகளாக பட்டா கேட்டும் போராடி வருகின்றனர். இந்நிலையில், தற்போது அப்பகுதியில் 67 ஏக்கர் அளவில் மத்திய சிறை வளாகம் வருவதாக கூறி, வருவாய் துறை அதிகாரிகள் சுமார் 50க்கும் மேற்பட்ட போலீசாரோடு இன்று நிலங்களை மீட்க பாதுகாப்பு வேலிகளை அகற்றினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகள் போலீசாரை முற்றுகையிட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை குண்டுகட்டாக தூக்கிசென்று கைது செய்தனர்.
பின்னர் திடீரென விவசாய நிலங்களுக்குள் இறங்கிய போலீசார் அங்குள்ள பாதுகாப்பு வேலிகளையும், போர்வெல், மற்றும் குடிசைகளையும் உடைத்து அகற்றினர். பின்னர், பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், கைது செய்தவர்களை போலீசார் விடுவித்தனர்.
இதனால், பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், கடந்த 1975 முதல் நாங்கள் நிலங்களை பயன்படுத்தி விவசாயம் செய்து வருகிறோம். 2006ல் கலைஞர் ஆட்சியில் 2 ஏக்கர் வழங்கும் திட்டத்தில் சில விவசாயிகளுக்கு பட்டா வழங்கபட்டது. மீதமுள்ள விவசாய நிலங்களுக்கு பட்டா தருகிறோம் எனக் கூறியவர்கள் தரவில்லை.பட்டா கேட்டு பல ஆண்டுகளாக போராடுகிறோம். அதிகாரிகள் பட்டா தராமல், அலைக்கழிக்கின்றனர். விவசாயம் செய்து வரும் நிலங்களை தங்களிடமிருந்து அபகரிக்காமல் தமிழக அரசு விரைவில் பட்டா வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.