கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.N.மோகன்ராஜ் அவர்களின் உத்தரவுப்படி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் காய்ச்ச பயன்படும் சாராய ஊரல்களை அழிப்பது, கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள், கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடுபவர்களை கட்டுப்படுத்த தனிப்படை அமைத்து மாவட்டம் முழுவதும் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் 29.01.2023-ம் தேதி கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் நேரடி தலைமையில் தனிப்படை காவலர்கள் அதிகாலை முதல் கல்வராயன்மலை பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டபோது குரும்பாலூர் கிழக்கு மற்றும் மேற்கு ஓடையில் மறைத்து வைத்திருந்த கள்ளச்சாராயம் காய்ச்ச பயன்படும் புளித்த சாராய ஊரல் 500 லிட்டர் வீதம் பிடிக்கக்கூடிய 02 பிளாஸ்டிக் பேரல்களில் 1,000 லிட்டர் மற்றும் 200 லிட்டர் பிடிக்கக்கூடிய பிளாஸ்டிக் பேரலில் 200 லிட்டர் கள்ளச்சாராயம் மற்றும் கள்ளக்குறிச்சி மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் ஆய்வாளர் திருமதி.தாரனேஸ்வரி தலைமையில் எழுத்தூர் காட்டுப்பகுதியில் மறைத்து வைத்திருந்த கள்ளச்சாராயம் காய்ச்ச பயன்படும் புளித்த சாராய ஊரல் 200 லிட்டர் பிடிக்கக்கூடிய 21 பிளாஸ்டிக் பேரல்களில் சுமார் 4,200 லிட்டர் என இரண்டு இடங்களிலும் மொத்தமாக 5,200 லிட்டர் சாராய ஊரல் மற்றும் 200 லிட்டர் கள்ளச்சாராயம் கண்டுபிடித்து சம்பவ இடத்திலேயே கொட்டி அழிக்கப்பட்டது. மேலும் இக்குற்ற செயலில் ஈடுபட்டு தலைமறைவாகியுள்ள குற்றவாளிகளை தனிப்படை காவலர்கள் தீவிரமாக தேடி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சமுதாயத்தை சீர்குலைக்கும் கள்ளச்சாராயம், கஞ்சா மற்றும் குட்கா விற்பனை போன்ற சட்டத்திற்கு புறம்பான குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.