சென்னை: மனக் கசப்பில் இருந்த காதலனிடம், உனக்கு பிடித்த நண்டு குழம்பு சமைத்து வைத்திருக்கிறேன் சாப்பிட வா என்று சொல்லி அழைத்து, மது அருந்த வைத்து நண்டு குழம்பு சாப்பிட வைத்த நேரத்தில், திட்டமிட்டபடியே ஆட்களை வரவழைத்து சரமாரியாக வெட்டி கொன்றிருக்கிறார் காதலி.
ரவுடி நாகூர் மீரான் கொலை வழக்கில் அவர் காதலி லோகேஸ்வரி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.
சென்னை ஆதம்பாக்கம் கக்கன் நகரை சேர்ந்தவர் நாகூர் மீரான். பிரபல ரவுடியான நாகூர்மீரான் மீது கொலை உள்பட 20க்கும் மேற்பட்ட வழக்குகள் போலீஸ் நிலையத்தில் உள்ள நிலுவையில் உள்ளன.
இந்த நிலையில் கடந்த 14 ஆம் தேதி அன்று ஆதம்பாக்கம் அம்பேத்கர் நகரில் இருக்கும் காதலி லோகேஸ்வரி வீட்டில் வெட்டி படுகொலை செய்யப்பட்டு கிடந்தார். 8 பேர் கொண்ட கும்பல் இந்த படுகொலை சம்பவத்தை ஈடுபட்டிருந்தனர் என்பது தெரியவந்தது.
இந்த படுகொலை வழக்கில் ஆதம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தியதில், அதே பகுதியை சேர்ந்த ரவுடி ராபின், கஞ்சா விற்பனை செய்ததில் ஏற்பட்ட தகராறிலும், யார் பெரிய ரவுடி என்ற போட்டியிலும் கூட்டாளிகளுடன் சேர்ந்து நாகூர்மீரானை வெட்டி படுகொலை செய்தது தெரியவந்தது.
இதன் பின்னர் கொலையாளிகள் ஆதம்பாக்கம் போலீசில் சரணடைந்தனர். அவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். நாகூர் மீரானை கொலை செய்தவர்கள் சரணடைந்து சிறையில் அடைக்கப்பட்டு விட்டாலும், காதலி லோகேஸ்வரி வீட்டில் இருந்த நாகூர்மீரான் எப்படி கொலை செய்யப்பட்டார்.
அவர் அங்கிருந்த தகவல் எப்படி எதிர் தரப்பினருக்கு தெரிய வந்தது என்கிற கோணத்தில் லோகேஸ்வரியை அழைத்து போலீசார் துருவித் துருவி விசாரணை நடத்தியனர். விசாரணையில் லோகேஸ்வரி முன்னுக்குப்பின் முரணாகவே பதிலளித்திருக்கிறார். இதனால் போலீசாருக்கு சந்தேகம் வந்திருக்கிறது.
அவரது செல்போனை வாங்கி ஆய்வு செய்ததில், அவர் ரவுடி ராபினிடம் பேசியிருப்பது தெரியவந்தது. இதனால் அந்தப் படுகொலையில் ரவுடி ராபினுக்கு லோகேஸ்வரி உதவி இருப்பதை உறுதி செய்து கொண்ட போலீசார்,
ராபினுக்கும் உனக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்டபோது, லோகேஸ்வரி உண்மையை ஒப்புக் கொண்டிருக்கிறார். நாகூர் மீரான் அடிக்கடி லோகேஸ்வரி வீட்டுக்கு வந்து தனிமையிலிருந்து செல்வது வழக்கமாக இருந்திருக்கிறது.
கொலை செய்யப்படுவதற்கு சில தினங்களுக்கு முன்பாக இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருக்கிறது. இந்த கருத்து வேறுபாடு தகராறாக மாறி இருவரும் பேச்சுவார்த்தை இல்லாமல் இருந்திருக்கின்றனர்.
அந்த நேரத்தில் நாகூர்மீரானை கொலை செய்ய ரவுடி ராபின் திட்டமிட்டிருந்ததாக லோகேஸ்வரிக்கு தெரியவந்திருக்கிறது.
இதை அடுத்து ராபினுக்கு போன் செய்து, நாகூர் மீரானை கொலை செய்ய உதவி செய்வதாக சொல்லியிருக்கிறார் லோகேஸ்வரி. அதன்படி திட்டமிட்டு கொலை செய்திருக்கிறார்கள்.
பேச்சுவார்த்தை இல்லாமல் இருந்த நாகூர்மீரானுக்கு, கடந்த 14 ஆம் தேதி அன்று திடீரென்று போன் செய்து, உனக்கு பிடித்த நண்டு குழம்பு சமைத்து வைத்திருக்கிறேன் வீட்டுக்கு வா என்று கூப்பிட்டு இருக்கிறார்.
சண்டைபோட்டு பிரிந்த காதலி ஆசையாக கூப்பிடுகிறாள் என்று நினைத்து மது வாங்கிக்கொண்டு லோகேஸ்வரி வீட்டுக்குச் சென்றிருக்கிறார் நாகூர்மீரான். அங்கே மது அருந்திவிட்டு நண்டுகுழம்பு சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, அவர் தன் வீட்டில் இருப்பதை முன்கூட்டியே ரவுடிகளுக்கு தெரியப்படுத்தி இருக்கிறார் லோகேஸ்வரி.
இதை எடுத்து ரவுடி ராபின் கூட்டாளிகளுடன் திடீரென்று லோகேஸ்வரி வீட்டுக்குள் நுழைந்து இருக்கிறார். அப்போது மது போதையில் சாப்பிட்டுக்கொண்டிருந்த நாகூர் மீரானை சரமாரியாக வெட்டி ரத்தவெள்ளத்தில் சாய்த்துவிட்டு தப்பியோடி இருக்கிறார்கள். லோகேஸ்வரி மூலம் இதைத் தெரிந்து கொண்ட போலீசார் அவரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
