விழுப்புரம் : விழுப்புரம் செஞ்சி பார் உாிமையாளர் மேல்மலையனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜாராம் என்கிற மணி (40), இவர் அதே பகுதியில் பார் நடத்தி வருகிறார். சம்பவத்தன்று காலை ராஜாராம் பாரில் இருந்து மோட்டார் சைக்கிளில் வீடு நோக்கி சென்று கொண்டிருந்தபோது எதிரே 2 மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் திடீரென ராஜாராமை வழிமறித்து அரிவாளால் அவரது தலை, கை உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக வெட்டினர். இதில் படுகாயம் அடைந்த ராஜாராம் ரத்தம் சொட்ட சொட்ட அங்கிருந்து தப்பி ஓடினார். அப்போது அந்த வழியாக வந்த தனியார் பஸ்சில் ஏறி உயிர் தப்பிய ராஜாராம் திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இதுகுறித்த புகாரின்பேரில் வளத்தி போலீஸ் இன்ஸ்பெக்டர் திரு.சுரேஷ்பாபு, தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு ராஜாராமை அரிவாளால் வெட்டிய மர்ம நபர்களை போலீசார் தேடி வந்தனர். பின்பு அப்பகுதியிலிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வுசெய்தபோது ஆள் அடையாளம் தெரியவந்தது. இது தொடர்பாக மேல்மலையனூரைச் சேர்ந்த பெருமாள் மகன் செல்வம் (30), புதுச்சேரியைச் சேர்ந்த நாராயணன் மகன் கவுதம் (27), பாஸ்கர் மகன் மணி (28) மற்றும் (17), வயது சிறுவன் ஆகியோரை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் தொழில் போட்டி காரணமாக ராஜாராமை வெட்டியதை அவர்கள் ஒப்புக்கொண்டனர். இதையடுத்து அவர்களை காவல்துறையினர், கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.