காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் அடுத்த ராஜகுளம் ஊராட்சியில், வசித்து வரும் எ.சிவஞானம் (56), என்பவர் சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை ராஜகுளம் பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இதே கிராமத்தை சேர்ந்த மண்டபத் தெருவில் வசிக்கும் சரவணன் (32), என்பவர் இவரது மளிகை கடைக்கு பக்கத்தில் துரித உணவகம் நடத்தி வருகிறார். இவர்கள் இருவருக்கும் கடந்த சில ஆண்டுகளாகவே இடம் தொடர்பான பிரச்னை நிலவி வந்துள்ளது.இந்நிலையில், நேற்று இரவு தனது கடையை மூடிவிட்டு வீட்டுக்கு சென்று கொண்டிருந்த சிவஞானத்தை சரவணன் மற்றும் அவரது நண்பரான சிட்டியம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த மணிகண்டன் (23), ஆபேல் (24) ஆகியோர் வழிமறித்து கத்தியால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்தனர்.
இதுதொடர்பாக காஞ்சிபுரம் தாலுகா காவல் நிலையத்திற்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்ததன் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அவரது உடலை கைப்பற்றி காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். கொலை செய்யப்பட்டவரின் மனைவி சாந்தி அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து மூன்று பேரையும் காவல்துறையினர் ,தேடிச் சென்றபோது, முட் புதாரில் பதுங்கி ஒளிந்து கொண்டிருந்த மூவரையும் போலீசார் அதிரடியாக கைது செய்து, தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.மேலும், காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட மூவர் மீதும் ஏற்கனவே தாலுகா காவல் நிலையத்தில், குற்ற வழக்குகள் இருப்பதும் காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
காஞ்சிபுரத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.ராஜ் கமல்