தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டத்தில் மனித உயிருக்கும், சுற்றுச்சூழலுக்கும் தீங்கு ஏற்படுத்தும் மருத்துவக் கழிவுகள், நெகிழிக் கழிவுகள் (Plastic) சாய்க்கழிவுகள், கோழிக்கழிவுகள் மற்றும் மீன்கழிவுகள் போன்றவற்றை கொட்டப்படுவதை தடுக்கும் பொருட்டு காவல்துறை சார்பாக லாரி உரிமையாளர்கள் மற்றும் சரக்கு வாகன உரிமையாளர்களை அழைத்து கலந்தாய்வு கூட்டம் நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு அனைத்து உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.
அவரது உத்தரவின்படி தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர்கள் தங்கள் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கலந்தாய்வுக் கூட்டம் நடத்தி வருகின்றனர். இக்கூட்டங்களின் வாயிலாக அண்டை மாநிலங்களிலிருந்து வரும் மருத்துவக் கழிவுகள், பிளாஸ்டிக் கழிவுகள், கோழி கழிவுகள், மீன் கழிவுகள் போன்றவற்றை வாகனங்களில் ஏற்றி வரக்கூடாது என்றும், மேற்படி கழிவுகளை வாகனங்களில் ஏற்றி வந்து தூத்துக்குடி மாவட்டத்தில் அனுமதிக்கப்படாத பொது இடங்களிலோ, தனியாருக்கு சொந்தமான இடங்களிலோ கொட்டவோ, குழி தோண்டி புதைக்கவோ கூடாது என்றும், அவ்வாறு சட்டவிரோதமாக கழிவுகளை ஏற்றி வரும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வாகன உரிமையாளர்கள் மற்றும் வாகன ஓட்டுனர்கள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன் அவர்கள் அறிவித்துள்ளார்.