திருநெல்வேலி: முன்னீர்பள்ளம் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில் குற்றச் செயல்களை தடுக்கும் வகையில் முன்னீர்பள்ளம் காவல் துறையினர் மூலம் அப்பகுதி ஊர்தலைவர்கள், பொதுமக்களுடன் சமாதானம் கூட்டம் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.நெ.மணிவண்ணன் இ.கா.ப., அவர்கள் தலைமையில் கருங்குளம் நயினார் திருமண மண்டபத்தில் வைத்து இன்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.நெ. மணிவண்ணன், இ.கா.ப., அவர்கள் பொது மக்களுடன் கலந்துரையாடி, தங்கள் பகுதியில் நடக்கும் குற்றச் செயல்களை தடுக்க பொதுமக்களாகிய நீங்கள் ஒத்துழைக்க வேண்டும்,
அனைவரும் ஒற்றுமையாக இருந்து குற்றச் செயல்களை தடுக்க வேண்டும் எனவும் மேலும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் வருங்காலத்தின் மீது அக்கறை கொண்டு அவர்களை முறையாக நல்வழிபடுத்த வேண்டும்.
குழந்தைகளை சாதி, மத, பேதமின்றி வளர்கவும், தங்கள் குழந்தைகளை குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடாமல் கல்வி மற்றும் பழக்கவழக்கங்களில் உயர்ந்த நிலையை அடையவும் அவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்கு பாடுபடவேண்டும்.
மேலும் பொதுமக்களாகிய நீங்கள் முன்வைக்கும் அனைத்து நியாயமான கோரிக்கைகளையும் மாவட்ட காவல் துறை மூலம் அரசுக்கு எடுத்து வைக்கப்படும் என்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தெரிவித்தார்கள்.
பின்னர் பொதுமக்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் நடவடிக்கைகளை பாராட்டி, காவல்துறையின் சட்டப்பூர்வ நடவடிக்கைகளுக்கு ஆதரவாக இருப்போம் என்று தெரிவித்தனர்.
இந்நிகழ்ச்சியில் சேரன்மகாதேவி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு.பார்த்திபன், சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் திரு.ரகுபதி, முன்னீர்பள்ளம் காவல் ஆய்வாளர் திரு.சண்முகசுந்தரம், மற்றும் காவல் துறையினர் கலந்து கொண்டனர்.