திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் முன்னீர்பள்ளம் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில் குற்றச் செயல் முன்விரோதபோக்கை தடுக்கும் வகையில் முன்னீர்பள்ளம் பகுதியில் உள்ள முன்னீர் பள்ளம், தருவை, கீழச்செவல்,மேலச்செவல், கொத்தன்குளம், கோபாலசமுத்திரம், செங்குளத்தை சேர்ந்த பொதுமக்களிடம் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.நெ.மணிவண்ணன் இ.கா.ப., அவர்கள் தலைமையில் சமூக நல்லிணக்க விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.நெ. மணிவண்ணன், இ.கா.ப., அவர்கள் பொது மக்களுடன் கலந்துரையாடினார், அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பேசுகையில் தங்கள் பகுதியில் நடக்கும் குற்றச் செயல்களை தடுக்க பொதுமக்களாகிய நீங்கள் ஒத்துழைக்க வேண்டும்,
அனைவரும் ஒற்றுமையாக இருந்து குற்றச் செயல்களை தடுக்க வேண்டும் எனவும் மேலும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் வருங்காலத்தின் மீது அக்கறை கொண்டு அவர்களை முறையாக நல்வழிபடுத்த வேண்டும் என்றும்.
குழந்தைகளை சாதி, மத, பேதமின்றி வளர்கவும், தங்கள் குழந்தைகளை குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடாமல் கல்வி மற்றும் பழக்கவழக்கங்களில் உயர்ந்த நிலையை அடையவும் அவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்கு பாடுபடவேண்டும் எனவும்
மேலும் பொதுமக்களாகிய நீங்கள் முன்வைக்கும் அனைத்து நியாயமான கோரிக்கைகளையும் மாவட்ட காவல் துறை மூலம் அரசுக்கு எடுத்து வைக்கப்படும் என்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தெரிவித்தார்கள்.
மேற்படி பகுதிகளில் சந்தேகப்படும்படியான நபர்கள் யாரேனும் கண்டால் அவர்களின் பற்றிய தகவல்களை உடனடியாக காவல்துறைக்கு தெரிவிக்கும்படி பொதுமக்களிடம் அறிவுறுத்தினார்.
விழிப்புணர்வு கூட்டத்தில் உயர் அதிகாரிகள், துணைகாவல் கண் காணிப்பாளர்கள் காவல் ஆய்வாளர்கள் மற்றும் காவல் துறையினர் கலந்து கொண்டனர்.