கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் பொருட்டு ஆகஸ்ட் மாதத்தின் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் தளர்வில்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் இன்று (02.08.2020) தூத்துக்குடி பழைய முனிசிபல் அலுவலக சந்திப்பில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். திரு. ஜெயக்குமார் அவர்கள் காவல்துறையின் ஊரடங்கு பணியை ஆய்வு செய்தார்.
அந்த ஆய்வின்போது சிலர் தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியே வந்துள்ளனர். அவ்வாறு வந்தவர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் கொரோனா வைரஸ் தாக்கம் குறித்தும், அது பரவாமல் தடுப்பதற்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது குறித்தும் விழிப்புணர்வு அறிவுரை வழங்கினார். மேலும் அனைவருக்கும் கபசுரக்குடிநீர் வழங்கி, முகக்கவசம் இல்லாமல் வந்தவர்களுக்க முகக்கவசம் வழங்கி எச்சரித்து அனுப்பினார்.
பின் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பத்திரிக்கையாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது பொதுமக்கள் தேவையில்லாமல் வெளியே சுற்றித்திரிவதை தவிர்க்க வேண்டும், வெளியே செல்லும்போது சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும், அவ்வப்போது சோப்பு மற்றும் கிருமி நாசினி கொண்டு கைகளை கழுவி சுத்தம் செய்ய வேண்டும், முகக்கவசம் அணியவேண்டும் என்றும், கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து நம்பை பாதுகாத்துக்கொள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டும் என்றும் அதற்கான வழிமுறைகளையும் எடுத்துரைத்தார்.
தேவையில்லாமல் ஊரடங்கு நேரத்தில் சுற்றித்திரிபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அவர்கள் பயன்படுத்தும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுகிறது. இதுவரை சுமார் 7000க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 3600 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களில் சுமார் 3400 வாகனங்கள் வாகன உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 190 வாகனங்கள் மட்டுமே ஒப்படைக்க வேண்டியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று சுமார் 200 இடங்களில் வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது. 2000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தூத்துக்குடியில் மட்டும் சுமார் 26 இடங்களில் வாகன சோதனை நடைபெற்று வருகிறது.
சட்ட விரோத செயல், எந்த செயலில் ஈடுபட்டாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் எச்சரித்துள்ளார்.
தூத்துக்குடி காவல் துணை கண்காணிப்பாளர் திரு. கணேஷ், மத்திய பாகம் காவல் ஆய்வாளர் திரு. ஜெயப்பிரகாஷ், உதவி ஆய்வாளர் திரு. காமராஜ், காவல்துறை போக்குவரத்து உதவி ஆய்வாளர் திரு. வெங்கடேஷ் மற்றும் காவல்துறையினர் உடனிருந்தனர்.