திருப்பத்தூர்: வருகின்ற 2026 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி வி. சியாமளா தேவி அவர்களின் வழிகாட்டுதலின்படி, மாவட்டத்தில் உள்ள முக்கிய சோதனைச் சாவடிகளில் காவல்துறையினர் மற்றும் மத்திய பாதுகாப்புப் படையினர் தேர்தல் பாதுகாப்பு முன் ஏற்பாடுகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக, (17.03.2026) தகரக்குப்பம், கொத்தூர், அண்ணா நகர் உள்ளிட்ட பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள சோதனைச் சாவடிகளில் அனைத்து வாகனங்களும் முறையாக நிறுத்தி சோதனை செய்யப்பட்டது. பரிசுப் பொருட்கள், வெளிமாநில மதுபானங்கள், கள்ளச்சாராயம் மற்றும் இயற்கை கனிமங்கள் உள்ளிட்ட சட்டவிரோத கடத்தல்களைத் தடுக்கும் வகையில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டது. தேர்தலை முன்னிட்டு சட்டம் மற்றும் ஒழுங்கை உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த சோதனை நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
















