கோவை : கோவை விமான நிலையம் வழியாக தங்கத்தை கடத்துவதில் கடத்தல் ஆசாமிகள் புதிய உத்திகளை கையாள்கிறார்கள். இந்தியாவில் தங்கத்தின் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. இதே போல இந்தியாவுக்கு கடத்தல் தங்கத்தின் வரத்தும் அதிகரித்துள்ளது. தங்கத்தை எந்த வடிவத்தில் கடத்தி வந்தாலும் அதை விமான நிலையங்களில் உள்ள ஸ்கேனர்களின் கண்களில் சிக்கி விடும். ஆனால் சமீப காலமாக தமிழகத்தில் குறிப்பாக கோவை விமான நிலையம் வழியாக கடத்தல் தங்கம் புதிய வடிவில் கடத்தப்படுகிறது. இதை விமான நிலையங்களில் பொருட்களை சோதனை செய்ய உதவும் ஸ்கேனரில் கூட தெரியாது. ஸ்கேனரில் சோதனை தெரியாத முடியாத அளவிற்கு தங்கத்துடன் சில வேதிப்பொருட்களை சேர்த்து அதை பசையாக்கி அதன் பின்னர் கடத்தப்படுகிறது. இது ஸ்கேனரிலும் சிக்காத மர்மமாக உள்ளது. கோவை விமான நிலையம் வழியாக நேற்றுமுன்தினம் ஒரு கிலோ தங்கம் பசையாக மாற்றி கடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து விமான நிலைய சுங்கத்துறையினர் கூறியதாவது:- தங்கத்தை வேறு பல வேதிப்பொருட்களுடன் குறிப்பிட்ட விகிதத்தில் கலந்து பசையாக்கி அதை ஆடைகளில் பேப்பர் போல ஒட்டி கடத்தப்படுகிறது. குறிப்பாக உள்ளாடைகளில் வைத்து கடத்தி வந்தால் அதை யாரும் பிரித்து பார்க்க மாட்டார்கள். இது எந்த ஸ்கேனராலும் கண்டுபிடிக்க முடியாது. குறிப்பிட்ட விமானத்தில், குறிப்பிட்ட பயணி தங்கத்தை பசையாக்கி இந்த உடையில் மறைத்து வைத்து கடத்தி வருகிறார் என்று சரியான ரகசிய தகவல் கிடைத்தால் மட்டுமே அத்தகைய தங்கத்தை கைப்பற்ற முடியும். இல்லையென்றால் சந்தேகத்தின்பேரிலோ, ஸ்கேனர், மெட்டல் டிடெக்டர் மூலமோ அதை கண்டுபிடிக்க முடியாது. அந்த அளவிற்கு கடத்தல் ஆசாமிகள் புதிய உத்திகளை கையாண்டு தங்கத்துடன் வேதிப்பொருளை கலந்து பசையாக மாற்றுவதில் கைதேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். இவ்வாறு பசையாக மாற்றப்பட்ட தங்கம் ஒருவேளை பிடிபட்டால் அதை பிரித்து எடுப்பதற்கே பல மணி நேரம் ஆகும். அதையும் வேதியியல் படித்தவர்கள் மட்டுமே சரியாக பிரித்தெடுக்க முடியும். தங்கத்தை கம்பியாக, தகடாக, சிறிய அளவில் செய்து ஆசனவாயில் மறைத்து உள்பட எந்த வகையில் கடத்தி வந்தாலும் அதை மெட்டல் டிடெக்டர், ஸ்கேனர் மூலம் கண்டுபிடித்து விட முடியும். ஆனால் தங்கத்தை பசையாக மாற்றி கடத்தி வந்தால் கண்டுபிடிக்கவே முடியாது. அதற்கு மாற்று வழி கண்டுபிடித்தால் மட்டுமே கடத்தலை தடுக்க முடியும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
நமது குடியுரிமை நிருபர்
A. கோகுல்