கோவை: கோவை மாவட்ட கலெக்டர் ராஜாமணி . கோவை மாநகர போலீஸ் கமிஷனர் சுமித் சரண் ஆகியோர் கடந்த சில நாட்களுக்கு முன்பு இடமாற்றம் செய்யப்பட்டனர். இவர்களுக்கு பதிலாக புதிய போலீஸ் கமிஷனராக டேவிட்சன் தேவாசீர்வாதம், புதிய கலெக்டராக எஸ். நாகராஜன் ஆகியோர் நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றுள்ளனர்.
இந்த நிலையில் இன்று கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருளரசு, மேற்கு மண்டல ஐஜி தினகரன் ஆகியோரை தேர்தல் ஆணையம் இன்று திடீர் இட மாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது. இதையடுத்து கோவை ஈரோடு, திருப்பூர், நீலகிரி, சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, நாமக்கல் ஆகிய 8 மாவட்டங்களை உள்ளடக்கிய மேற்கு மண்டல போலீஸ் ஐஜியாக அமல்ராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் கோவை மாநகர போலீஸ் கமிஷனராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஓரிரு நாட்களில் கோவை மேற்கு மண்டல ஐஜியாக அமல் ராஜ் பொறுப்பேற்க உள்ளார்.
இதேபோல கோவை மாவட்ட புதிய போலீஸ் சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டுள்ள செல்வ நாகரத்தினமும் ஒரிரு நாட்களில் பொறுப்பேற்கிறார். உயர் போலீஸ் அதிகாரிகள் திடீர் மாற்றம் கோவை மாவட்டத்தில் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நமது குடியுரிமை நிருபர்
![](https://34.68.197.11/wp-content/uploads/gokul.png)
A. கோகுல்