கோவை: கோவை கெம்பட்டி காலனி 4-வது வீதியை சேர்ந்த சிவானந்தம் என்பவரின் மனைவி தனலட்சுமி (வயது 62) கடந்த 30 ஆம் தேதி கொடுரமான முறையில் வெட்டி கொலை செய்யப்பட்டார். இது குறித்து, காவல் ஆணையர் திரு.சுமித்சரண், காவல் துணை ஆணையர் உமா ஆகியோரின் உத்தரவின்பேரில், 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வந்தனர்.
தனலட்சுமி 4-வது மகன் மணிகண்டன் (28) என்பவருடன் வசித்து வந்தார். மணிகண்டன் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 30-ந் தேதி மணிகண்டன் வேலைக்கு சென்றுவிட்டார். தனலட்சுமி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். மூதாட்டி தனியாக இருப்பதை அறிந்த மர்ம நபர்கள் தனலட்சுமியை வெட்டி கொலை செய்தனர். பின்னர் அவர் அணிந்து இருந்த 10 பவுன் தங்கநகைகள், பீரோவில் இருந்த 85 பவுன் தங்கநகைகள் மற்றும் ரூ.3 லட்சத்து 50 ஆயிரம் ஆகியவற்றை கொள்ளையடித்துக்கொண்டு தப்பிச்சென்றனர்.
இதற்கிடையில் பணி முடிந்து இரவு வீடு திரும்பிய மணிகண்டன், வீட்டில் தாயார் தனலட்சுமி ரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடப்பதையும், நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பதையும் கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக இதுகுறித்து பெரியகடை வீதி காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தார்.
காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அவர்கள் அந்த பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளையும் ஆய்வு செய்தனர். இதில் தனலட்சுமி வீட்டிற்கு வந்தவர்கள் முகக்கவசம் அணிந்து வந்து சென்றதால் சரியாக முகம் தெரியவில்லை. இதனால் துப்புதுலங்குவதில் தாமதம் ஏற்பட்டது. தொடர்ந்து நடத்திய விசாரணையில் தனலட்சுமியின் வீட்டின் அருகே வசித்து வந்த திலக், அவருடைய சகோதரிகள் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
மேலும் அவர்கள் கொலை நடந்த நாளில் இருந்து குடும்பத்துடன் மாயமாகி இருந்ததும் தெரியவந்தது. எனவே அவர்களது செல்போன் எண்ணை வைத்து அவர் எங்கு உள்ளாார்? என்று போலீசார் ஆய்வு செய்தனர். மூதாட்டி கொலை மற்றும் கொள்ளையில் திலக் மூளையாக செயல்பட்டது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. கியாஸ் நிரப்பும் வேலை செய்து வந்த அவர் அதனை விட்டுவிட்டு, கார்களை வாங்கி விற்கும் தொழில் செய்து வந்துள்ளார். அவர் சகோதரிகள் லதா ராணி, மாலா மற்றும் கூலிப்படையான அதே பகுதியை சேர்ந்த செல்வன், சத்தியசீலன், மனோஜ் ஆகியோருடன் சேர்ந்து மூதாட்டியை கொலை செய்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
மேலும் இந்த கொலை மற்றும் கொள்ளைக்கு மூளையாக செயல்பட்ட திலக் சென்னையில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. அவரை பிடிக்க தனிப்படை போலீசார் சென்னை விரைந்துள்ளனர்.
திலக்கின் சகோதரி லதாராணி போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது:- நாங்கள் குடும்பத்துடன் கெம்பட்டி காலனி 4-வது வீதியில் கடந்த சில ஆண்டுகளாக வாடகை வீட்டில் வசித்து வருகிறோம். அந்த பகுதியில் உள்ள மளிகை கடைக்கு பொருட்கள் வாங்க செல்லும்போது தனலட்சுமியுடன் பழக்கம் ஏற்பட்டது. இதனையடுத்து நான் அவரது வீட்டுக்கு அடிக்கடி செல்வேன். அவருக்கு சில உதவிகளும் செய்து வந்தேன். அப்போது அவர் தனியாக வசிப்பதையும், ஏராளமான நகை மற்றும் பணம் இருப்பதையும் பார்த்தேன். இதுகுறித்து என்னுடைய சகோதரர் திலக்கிடம் கூறினேன். அவர் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து வசதியாக வாழலாம் என்று கூறினார். இதனையடுத்து எனது சகோதரி மாலா, சகோதரரின் கூட்டாளிகளான கூலிப்படையை சேர்ந்த செல்வன், மனோஜ், சத்தியசீலன் ஆகியோருடன் சேர்ந்து மூதாட்டி தனியாக இருக்கும் நேரம் பார்த்து கொள்ளையடிக்க திட்டம் தீட்டினோம். சம்பவத்தன்று நாங்கள் மூதாட்டியின் நடவடிக்கைகளை கண்காணித்தோம் மதியம் 3 மணியளவில் நான் அவரது வீட்டுக்கு சென்றேன். அப்போது அவர் தனியாக இருந்ததை உறுதி செய்தேன். இதையடுத்து எனது சகோதரர் திலக் மற்றும் அவரது கூட்டாளிகள் அதிரடியாக உள்ளே நுழைந்தனர். அவர்களை பார்த்ததும் தனலட்சுமி சத்தம் போட்டார். இதனால் ஆத்திரமடைந்த திலக் அங்கு இருந்த கத்தியை எடுத்து மூதாட்டியின் கழுத்தில் குத்தினார். நிலைகுலைந்த அவர் தப்பி வெளியே செல்ல முயன்றார். பின்னர் எனது சகோதரரின் கூட்டாளிகள் அரிவாளால் தனலட்சுமியின் தலையில் வெட்டினர். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். பின்னர் நாங்கள் அவர் அணிந்து இருந்த நகை, பீரோவில் இருந்த நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்துக்கொண்டு தலைமறைவானோம். போலீசார் நடத்திய விசாரணையில் சிக்கிக்கொண்டோம்.இவ்வாறு அவர் கூறினார்.
மூதாட்டி கொலை வழக்கில் துப்பு துலக்கிய போலீஸ் தனிப்படையினரை காவல் ஆணையர் திரு.சுமித்சரண் பாராட்டினார்.
நமது குடியுரிமை நிருபர்
A. கோகுல்