கோவை: சமூகத்தின் நச்சாக விளங்கும் போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப்பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.Dr.K.கார்த்திகேயன், இ.கா.ப., அவர்கள் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். இதன் தொடர்ச்சியாக கடந்த இரண்டு நாட்களாக (21.09.2024, 22.09.2024) கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் ஒவ்வொரு காவல் நிலையங்களிலும் கடந்த 15 வருடங்களில் கஞ்சா வழக்குகளில் சம்மந்தப்பட்ட சுமார் 2000 பழங்குற்றவாளிகளை கண்காணிக்க 86 தனிப்படைகள் என சுமார் 400 காவல்துறையினர் மூலம் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது. மேற்படி கஞ்சா வேட்டையில் இக்குற்றவாளிகள் அனைவரின் இருப்பிடங்களையும் சோதனை செய்து , 10 கஞ்சா குற்றவாளிகள் மீது 10 வழக்குகள் பதிவு செய்தும், அவர்களிடமிருந்த சுமார் 10 கிலோ கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டது.
மேலும் மாவட்டம் முழுவதும் நடத்தப்பட்ட சோதனையில் சட்டத்திற்கு விரோதமாக விற்பனைக்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 1000 கிலோ புகையிலை பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டது மற்றும் தொண்டாமுத்தூர் பகுதியில் சட்டத்திற்கு விரோதமாக மதுபானம் விற்ற 1 பார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு பேரூர் வட்டாட்சியர் மூலம் சீல் வைக்கப்பட்டது. கஞ்சா விற்பனையில் ஈடுபடும் குற்றவாளிகள் மீதான கஞ்சா வேட்டை தொடர்ந்து நடைபெறும் என கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் கடுமையாக எச்சரித்துள்ளார்.
மேலும் இது போன்று போதைப் பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டாலோ அல்லது சட்ட ஒழுங்கிற்கு எதிராக செயல்பட்டாலோ காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க பொதுமக்கள் தயங்காமல் அழைத்திடுங்கள் கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 94981-81212 மற்றும் வாட்ஸ்அப் எண் 77081-00100 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்போரின் ரகசியங்கள் காக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
A. கோகுல்