கோவை : பொள்ளாச்சியில், வெடிகுண்டு மிரட்டல் விடுத்து, போலீஸ் ஸ்டேஷனுக்கு கடிதம் வந்ததை தொடர்ந்து, வாகன சோதனையை போலீசார் தீவிரப்படுத்தி உள்ளனர்.பொள்ளாச்சி குமரன் நகர்ப்பகுதியில், பா.ஜ., ஹிந்து முன்னணி மற்றும் ஆர்.எஸ்.எஸ்., நிர்வாகிகளின் கார் மற்றும் ஆட்டோக்களை மர்மநபர்கள் சேதப்படுத்தினர். இச்சம்பவத்தில் ஈடுபட்ட, ஆறு பேரை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில், பொள்ளாச்சி போலீஸ் ஸ்டேஷனுக்கு, மிரட்டல் கடிதம் வந்தது. அதில், பொள்ளாச்சியில், 16 இடங்களில், பெட்ரோல் குண்டு வீசப்படும் அல்லது கையெறி குண்டு வீசப்படும், என, எஸ்.டி.பி.ஐ., பி.எப்.ஐ., பெயரில் கடிதம் எழுதப்பட்டுள்ளது.மிரட்டல் கடிதம் போலீஸ் ஸ்டேஷனுக்கே வந்ததையடுத்து போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்.
கடிதம் அனுப்பியது யார்?, எந்த தபால் அலுவலகத்தில் இருந்து அனுப்பப்பட்டுள்ளது உள்ளிட்ட விபரங்கள் குறித்து விசாரணை நடக்கிறது. தபால் அலுவலகங்கள் அருகே உள்ள கண்காணிப்பு கேமராக்களில் சந்தேகப்படும்படி நபர்கள் நடமாட்டம் உள்ளதா என்பது ஆய்வு செய்யப்படுகிறது, என, போலீசார் தெரிவித்தனர். பொள்ளாச்சி – உடுமலை ரோடு, தபால் அலுவலகம் ரோடு சந்திப்பு பகுதி, குமரன் நகர், பஸ் ஸ்டாண்ட், காந்தி சிலை அருகே, பாலக்காடு ரோடு, மீன்கரை ரோடு என, நகரின் முக்கியப்பகுதிகளில், எஸ்.ஐ., தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.வாகனங்களின் எண், ஓட்டுனர் பெயர், எங்கே செல்கின்றனர் உள்ளிட்ட விபரங்களை கேட்டறிந்து அதன் பின், அனுமதிக்கின்றனர். சந்தேகப்படும் படியான நபர்களின் நடமாட்டம் உள்ளதா என கண்காணிப்பு பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
