கோவை: கோவையை அடுத்த சுந்தராபுரம் அருகில் உள்ள மாச்சம்பாளையத்தை சேர்ந்தவர் சூரியபிரகாஷ். இவர் அந்த பகுதி ஆர்.எஸ்.எஸ். செயலாளராக உள்ளார். இவர் மதுக்கரை சாலையில் மரச்செக்கு எண்ணெய் கடை நடத்தி வருகிறார்.
கடந்த மார்ச் மாதம் 11-ந் தேதி மதுக்கரை மார்க்கெட் ரோட்டில் உள்ள தனது கடையில் இருந்தபோது அங்கு இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம ஆசாமிகள் சிலர் அவரை அரிவாளால் வெட்டினார்கள். அதன்பின்னர் மர்ம ஆசாமிகள் தப்பிச் சென்றனர். இதில் பலத்த காயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.
அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இது தொடர்பாக போத்தனூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து முகமது அனீபா என்பவரை ஏற்கனவே கைது செய்தனர்.
அவரிடம் விசாரணை நடத்தியதில் இதில் மேலும் சிலருக்கு தொடர்பிருப்பது தெரியவந்தது. அவர்களை காவல்துறையினர் தேடி வந்தனர்.
இந்த நிலையில் ஆர்.எஸ்.எஸ். பிரமுகரை அரிவாளால் வெட்டிய சம்பவம் தொடர்பாக கோவை தெற்கு உக்கடம் ரோஸ் கார்டன் பகுதியை சேர்ந்த ஜாபர் சாதிக்(வயது 28) என்ற மேலும் ஒருவரை காவல்துறையினர் கைது செய்தனர். பின்னர் அவரை காவல்துறையினர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதற்கிடையில் கைதான ஜாபர் சாதிக் வீட்டில் நேற்றுக்காலை கோவைமாநகர தெற்கு பகுதி உதவி ஆணையர் திரு.செட்ரிக் இமானுவேல் உத்தரவின்பேரில் போத்தனூர் காவல் ஆய்வாளர் திரு.மகேஷ்வரன் மற்றும் காவல்துறையினர் சோதனை நடத்தினார்கள்.
கோவையிலிருந்து, நமது குடியுரிமை நிருபர்
A. கோகுல்