கோவை : மதுரை மாவட்டம் சேடப்பட்டி தாலுகாவில் உள்ள பெருங்காமநல்லூரை சேர்ந்தவர் தங்கத்துரை வயது 24 இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டம் பேரூரணியில் உள்ள போலீஸ் பயிற்சி பள்ளிக்கூடத்தில் காவலர் பயிற்சி முடித்தார்.
1 – 9 – 2019 முதல் கோவை செல்வபுரம் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்தார். கடந்த மாதம் 6ஆம் தேதி செல்வபுரம் காவல் நிலையம் அருகே பணிக்கு சென்று கொண்டிருந்த போது திடீரென்று மயங்கி விழுந்தார். அங்கிருந்த காவலர்கள் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் அவரை பரிசோதித்து பார்த்த டாக்டர்கள் அளவுக்கு அதிகமான இரத்த கொதிப்பு காரணமாக மூளைக்கு செல்லக்கூடிய நரம்பில் ரத்தம் உறைந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவரை மேல் சிகிச்சைக்காக மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் இடதுபுறம் ஒரு கை ஒரு கால் செயல் இழந்து விட்டதாக தெரிவித்தனர். தொடர்ந்து அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் இன்று காலை 7 மணிக்கு தங்கத்துரை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது உடல் சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு ஏராளமான போலீசார் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். போலீஸ் மரியாதையுடன் இன்று மாலை உடல் அடக்கம் செய்யப்படுகிறது. இவரது இறப்பு செல்வபுரம் காவல் நிலையத்தில் பணிபுரியும் போலீசாருக்கும் மாநகர காவல் துறைக்கும் பெருத்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவையிலிருந்து நமது நிருபர்
A. கோகுல்