கோவை : பட்டா பெயர் மாற்றத்துக்கு லஞ்சம் பெற்ற, கோவை மாநகராட்சி சர்வேயர் உட்பட மூவரை லஞ்ச ஒழிப்பு போலீசார், கைது செய்து சிறையில் அடைத்தனர். கோவை ஒண்டிபுதுாரை சேர்ந்தவர் நாகராஜன், 62. இவர் தனது மனைவி சுமதி பெயரில், வீட்டுமனையை இரு மாதங்களுக்கு முன் வாங்கினார். பட்டா பெயர் மாற்றத்துக்காக கோவை சிங்காநல்லுாரில் உள்ள மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகத்தில் விண்ணப்பித்தார். இவரது விண்ணப்பத்தை சர்வேயர் நிர்மல்குமார், 40 ஆய்வு செய்தார்.
இரு மாதங்களாக பட்டா மாறுதல் செய்து தராததால், நேற்று முன்தினம் நிர்மல்குமாரை சந்தித்த நாகராஜன், பட்டா பெயர் மாற்றம் செய்து தரும்படி தெரிவித்தார். ஓய்வு பெற்ற நிலஅளவை உதவியாளர் நடராஜன், 67 என்பவரிடம் இருந்து, ஆவணத்தை பெற்றுக் கொள்ளுமாறு, நிர்மல் குமார் தெரிவித்தார். நடராஜனை தொடர்பு கொண்டபோது, 6,000 ரூபாய் லஞ்சம் தர வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
நிர்மல்குமாரிடம் கூறியபோது, அவரும், ‘லஞ்சம் தந்தால் தான் ஆவணம் கிடைக்கும்’ என உறுதியாக கூறியுள்ளார். இது குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம், நாகராஜன் புகார் தெரிவித்தார். ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை பெற்றுக்கொண்ட நாகராஜன், மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகத்தில் இருந்த நிர்மல்குமாரிடம் கொடுத்தார்.
அப்போது, பணத்தை நடராஜனிடம் வழங்குமாறு தெரிவித்துள்ளார்.
நடராஜன் அங்கிருந்த பிரதீப் குமார், 35 என்பவரிடம் கொடுக்குமாறு கூறினார். பிரதீப் குமாரிடம் பணத்தை கொடுக்கும்போது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துறை டி.எஸ்.பி., கணேசன், இன்ஸ்பெக்டர்கள் ஆறுமுகம், எழிலரசி ஆகியோர், அவரை கையும், களவுமாக பிடித்தனர்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் நிர்மல்குமார், நடராஜன் பணம் வாங்க கூறியது தெரிந்தது. இதையடுத்து, மூவரையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர். கைது செய்யப்பட்ட சர்வேயர் நிர்மல்குமார், இதற்கு முன், பொள்ளாச்சி அருகே ஆனைமலையில் பணிபுரிந்துள்ளார்.
மூன்று மாதங்களுக்கு முன், கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத்துக்கு மாற்றலாகி வந்துள்ளார். ஆனைமலையில் பணிபுரிந்தபோது பொதுமக்களிடம் லஞ்சம் பெறுவதற்காக, பிரதீப் குமாரை பணியமர்த்தியுள்ளார். கோவைக்கு மாற்றப்பட்ட நிலையில் அவர் பிரதீப்குமாரையும் தன்னுடன் கோவைக்கு அழைத்து வந்து பொதுமக்களிடம் லஞ்சம் வாங்க பணியமர்த்தியுள்ளார்.
கோவையிலிருந்து நமது நிருபர்
A. கோகுல்