கோவை : கோவை சீரநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த பள்ளி மாணவி, காதலருடன் நவ.26-ம் தேதி பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். அன்றைய தினம் இரவு 8 மணிக்கு சீரநாயக்கன் பாளையம் ஐஸ்வர்யா நகரில் உள்ள பூங்காவுக்கு சென்ற இருவரும்இ இரவு 9 மணியளவில் வீடு திரும்பிய போது, இருவரையும் வழிமறித்த 6 பேர் கொண்ட கும்பல், ஆள் இல்லாத இடத்திற்கு இருவரையும் அழைத்துச் சென்றுள்ளனர்.
அங்கு பள்ளி மாணவியின் காதலனை தாக்கி, ஆடைகளை கழற்றி செல்போன் கேமராவில் வீடியோ பதிவு செய்துள்ளனர். பின்னர், பள்ளி மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து அதை புகைப்படம் எடுத்து, சம்பவத்தை வெளியில் கூறினால் புகைப்படத்தை வெளியிட்டு விடுவோம் என மிரட்டி உள்ளனர்.
சம்பவம் நடந்த அன்று அந்த சிறுமி காதலருடன் அவரது வீட்டிலேயே தங்கியுள்ளார். மறு நாள் மாலை வீடு விரும்பிய அவர், தாயிடம் நடந்தவற்றை விவரித்துள்ளார். பின்னர், ஆர்.எஸ்.புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பள்ளி மாணவி புகார் அளித்தார். இதையடுத்து, பள்ளி மாணவி சிறுமி என்பதால் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்ற தடுப்பு (போக்சோ) சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், வழக்கில் தொடர்புடைய 6 பேரை தேடி வந்தனர்.
இந்நிலையில், சீரநாயக்கன் பாளையத்தைச் சேர்ந்த டி.ராகுல் (21), ஆர்.பிரகாஷ்(22), எஸ்.கார்த்திகேயன்(28), எஸ்.நாராயண மூர்த்தி(32) ஆகிய 4 பேரை காவல் ஆய்வாளர் ஆர்.பிரபா தேவி தலைமையிலான காவல்துறையினர் நேற்று கைது செய்தனர்.
பின்னர், அனைவரும் மகளிர் நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர் படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளிகள் 2 பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
A. கோகுல்