கோவை : கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள முத்துக்கவுண்டன் புதூரைச் சேர்ந்தவர் 28 வயதான ஆரோக்கியராஜ்; பெயின்டராகப் பணியாற்றி வந்தார். செவ்வாய் இரவு 8 மணியளவில், அதே பகுதியில் உள்ள கெளமாரி மெஸ் என்ற கடையில், புரோட்டா வாங்கச் சென்றுள்ளார்
அவரது பார்சலுக்கு ஒரு பாக்கெட் குருமா கொடுத்துள்ளார் கடை உரிமையாளர் கரிகாலன். ஆரோக்கியராஜ் கூடுதலாக 2 பாக்கெட்டுகள் குருமா கேட்டுள்ளார்; ஒரு பாக்கெட் கொடுத்த நிலையில் மேலும் ஒரு பாக்கெட் தரும்படி கேட்டுள்ளார்.
கடையின் புரோட்டா மாஸ்டர் கருப்பசாமி இதற்கு மேல் தர முடியாது எனக் கூறியதால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
வாக்குவாதம் ஒரு கட்டத்தில் அடிதடி சண்டையாக மாற, கடை உரிமையாளர் கரிகாலன், புரோட்டா மாஸ்டர் கருப்பசாமி மற்றும் கடையில் இருந்த இன்னொருவர் ஆகிய 3 பேரும் சேர்ந்து ஆரோக்கியராஜைக் கடுமையாக அடித்துள்ளனர்.
இந்த சண்டையில் கடையில் இருந்த குருமா, புரோட்டாக்கள் எல்லாம் சிதறி விழுந்தன.அப்படி இருந்தும் சண்டையை விடாமல் கட்டிப் புரண்டு சண்டையிட்டதில் ஆரோக்கியராஜின் பின்னந்தலையில் காயம் ஏற்பட்டுள்ளது
அருகில் இருந்தவர்கள் சண்டையை விலக்கி விட்டு ஆரோக்கியராஜை மீட்டு சூலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.ஆனால் வழியிலேயே ஆரோக்கியராஜ் உயிரிழந்து விட்டதாக அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் தெரிவித்தனர்.போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், ஆரோக்கியராஜ் அந்தக் கடையில் கணக்கு வைத்திருந்தது தெரியவந்துள்ளது.
சமீபத்தில் உணவு வாங்கி விட்டு பணம் கொடுக்காமல் ஆரோக்கியராஜ் இழுத்தடிக்கவே, அதுதொடர்பாக பஞ்சாயத்து நடந்து ஆரோக்கியராஜ் பணம் செலுத்தியதாகக் கூறப்படுகிறது.
மேலும் ஆரோக்கியராஜ் எப்போதும் கூடுதலாக குருமா போன்றவை கேட்டு பிரச்னையில் ஈடுபட்டதாகவும் தெரிகிறது.இதுதொடர்பாக, கரிகாலன் மற்றும் புரோட்டா மாஸ்டர் கருப்பசாமி இருவரையும் போலீசார் கைது செய்தனர்; மேலும் ஒருவரைத் தேடி வருகின்றனர்.
புரோட்டாவுக்கு கூடுதல் குருமா கேட்ட நபர் கொலை செய்யப்பட்ட சம்பவம், அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவையிலிருந்து நமது நிருபர்
A. கோகுல்