கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மக்கள் செய்தி தொடர்பு அலுவலகத்தில் பணிபுரிந்து வரும் பிரபு மற்றும் மக்கள் செய்தி தொடர்பு அலுவலர் டிரைவராக பணிபுரிந்து வரும் சுரேஷ் பாபு ஆகியோர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள் வரும் பொதுமக்களிடம், அரசு வேலை வாங்கித் தருவதாக ஆசை தூண்டும் வகையில் பேசி, தமிழக அரசின் சுகாதாரத்துறை, மாநகராட்சி, கல்வித்துறை, நீதித்துறை, கலெக்டர் அலுவலகம் போன்ற பல துறைகளில் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி பொதுமக்களிடம் லட்சக்கணக்கில் பணம் பெற்றுள்ளனர். மேலும் போலியான பணி நியமன ஆணைகளை தயார் செய்து கொடுத்து ஏமாற்றியதாக, பாதிக்கப்பட்ட பொதுமக்கள் கோவை மாவட்ட ஆட்சியரின் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் புகார் தெரிவித்தனர். புகாரின் அடிப்படையில், கோவை மாநகர குற்றப்பிரிவு, வழக்கு பதிவு செய்து புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
கோவை மாநகர காவல் ஆணையர் திரு.சுமித் சரண், IPS அவர்கள் உத்தரவின் பேரில், துணை ஆணையர் திருமதி. உமா, ஐபிஎஸ் அவர்களின் மேற்பார்வையில், உதவி ஆணையர் மத்திய குற்றப்பிரிவு திரு.எஸ். சௌந்தரராஜன் அவர்களின் தலைமையில், காவல் ஆய்வாளர் திரு.ரவி அவர்கள் மேற்படி வழக்கின் குற்றவாளிகளான திரு.பிரபு மற்றும் திரு.சுரேஷ்பாபு ஆகியோரை இன்று கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டனர்.
பொதுமக்கள் முறையான அரசு அறிவிப்பு இன்றி, தகுதித்தேர்வு என்று குறுக்கு வழியில் பணம் கொடுத்து அரசு வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறுவதை நம்பி ஏமாற வேண்டாம் எனவும், மேலும் முதலீடு செய்தால் அதிக லாபம் ஈட்டி தருவதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றியதாக பல புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. எனவே பொதுமக்கள் இது போன்ற வார்த்தைகளை நம்பி ஏமாற வேண்டாம் என காவல்துறையினர் கேட்டுக் கொள்ளப்படுகிறது. கோவையிலிருந்து,
நமது குடியுரிமை நிருபர்
A. கோகுல்