தூத்துக்குடி : கோவில்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் அலுலவகத்தில் பராமரிக்கப்படும் ஆவணங்களையும், பதிவேடுகளையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். திரு. எல். பாலாஜி சரவணன் அவர்கள் (29.11.2022) ஆய்வு செய்தார். மேலும் இந்த ஆய்வில் கஞ்சா, புகையிலை போன்ற போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனை செய்பவர்கள் மற்றும் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், காவல் நிலையங்களுக்கு புகார் அளிக்க வரும் பொதுமக்களிடம் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும் எனவும், காவல் நிலைய நடவடிக்கைகள் அனைத்தும் சட்டத்திற்குட்பட்டு இருக்கவேண்டும் எனவும் அறிவுரைகள் வழங்கினார். அதனை தொடர்ந்து கோவில்பட்டி உட்கோட்டத்தில் காவல்துறையினருக்கு காவல் துணை கண்காணிப்பாளர் திரு. வெங்கடேஷ், அவர்கள் தலைமையில் வழக்குகளின் கோப்புகளை திறம்பட கையாள்வது குறித்து நடைபெற்ற பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு அங்கு நடைபெற்ற தேர்வில் முதல் இடம் பிடித்த கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய பெண் காவலர் ராஜேஸ்வரி, இரண்டாம் இடம் பிடித்த கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய பெண் காவலர் அழகுமாரி மற்றும் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய காவலர் ராமகிருஷ்ணன் ஆகியோருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
மேலும் கடந்த (27.11.2022) அன்று குமாரிகரி சி.கே.டி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற சிலம்பம் போட்டியில் கோவில்பட்டி உட்கோட்ட காவல்துறையினரின் குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் என 100 பேர் கலந்து கொண்ட போட்டியில் காவல்துறையினரின் குழந்தைகள் 20 பேர் வெற்றி பெற்று சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் பெற்றுள்ளனர். மேற்படி சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் பெற்ற காவல்துறையினரின் குழந்தைகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன் அவர்கள் இனிப்புகள் வழங்கி பாராட்டி மென்மேலும் வெற்றிகள் பெற வாழ்த்தினார்.
அதன்பின்னர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் மேற்படி அலுவலக வளாகம் சுத்தமாக வைக்கப்பட்டுள்ளதா என சுற்றிலும் பார்வையிட்டு வளாகத்தில் மரக்கன்று நட்டார்.
இந்நிகழ்வின்போது கோவில்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் திரு. வெங்கடேஷ், கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் திரு. சுஜித் ஆனந்த், மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் திரு. கிங்ஸ்லி தேவ் ஆனந்த், கழுகுமலை காவல் நிலைய ஆய்வாளர் திரு. விஜயகுமார், கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. பத்மாவதி, கோவில்பட்டி கிழக்கு குற்றப் பிரிவு ஆய்வாளர் திருமதி. மங்கையற்கரசி உள்ளிட்ட காவல்துறையினர் உடனிருந்தனர்.