தூத்துக்குடி: கோவில்பட்டி அருகேயுள்ள நாலாட்டின்புதூரில் இருக்கும் சாலைகுளம் கண்மாயின் ஒரு பகுதியில் சுமார் 2 அடி உயரமுள்ள கோவில் கலசம் ஒரு நீண்ட கம்புடன் இணைக்கப்பட்ட நிலையில் அதன் அடிப்பகுதியில் கல் கட்டப்பட்டு கிடந்துள்ளது. அப்பகுதியில் விவசாய நிலத்திற்கு சென்றவர்கள் இதனை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர். மேலும் இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் மற்றும் நாலாட்டின்புதூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். இதையெடுத்து போலீசார் விரைந்து சென்று தண்ணீரில் கிடந்த கலசத்தினை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
சுமார் 2 அடி நீளமுள்ள செம்பு கலந்த கோவில் கலசம் சுமார் 10 அடி உயரமுள்ள கம்புடன் இணைக்கப்பட்டுள்ளது. மேலும் கம்பின் நடுபகுதியில் மண்ணினால் செய்யப்பட்ட ஒரு கலசமும் உள்ளது. கம்பின் கடைசி பகுதியில் கல் கட்டப்பட்டுள்ளது. ஏதாவது ஒரு கோவிலில் இருந்து திருடி கம்பின் ஒரு பகுதியில் கல்லினை கட்டி தண்ணீரில் போட்டு, பின்னர் எடுத்து கொள்ளலாம் என்று நினைத்து மர்ம நபர்கள் வீசி சென்றார்களா அல்லது வேறு எதுவும் காரணமா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இரிடியத்திற்காக கோவில் கலசம் திருட்டு, இரிடியம் பெயரில் மோசடி என ஒரு புறம் அரங்கேறி வரும் நிலையில் கண்மாயில் கோவில் கலசத்தினை வீசி சென்றுள்ளது அப்பகுதியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.