மதுரை : மதுரை கோரிப்பாளையம் பள்ளிவாசல் தெருவில், அம்பா வர்ம வைத்திய சாலை என்ற பெயரில் கிளினிக் நடத்தி வந்தார் சையது சுல்தான் மொஹைதீன் (33), என்பவர். இவர் பி.காம் படித்து விட்டு செருப்புக் கடை நடத்தி வந்தார். கொரோனா பெருந்தொற்று காலத்தில் செருப்பு கடை நஷ்டம் ஏற்பட்டதால், கேரளா சென்று வர்ம வைத்தியம் குறித்து ஒரு வருட பயிற்சி பெற்று அதே பகுதியில் அம்பா வர்ம வைத்யசாலை என்ற பெயரில் கிளினிக் ஆரம்பித்துள்ளார். அப்பகுதிவாசிகள் பலரும் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அதில் பெரும்பாலனோருக்கு தீவிர பக்க விளைவுகள் ஏற்பட்டுள்ளன. இவர்களுக்கு சையத் சுல்தான் ஆட்டுத் தலை, இரும்புத்தூள், கோழி எலும்புகள் போன்றவற்றிலிருந்து மருந்துகளைத் தயாரித்து கொடுத்து வருவதாக குற்றஞ்சாட்டப்படுகிறது.
மேலும், நோயாளிகளை மற்ற மருத்துவர்களுடன் கலந்தாலோசிக்க வேண்டாம் என அறிவுறுத்தியதாகவும், நீரிழிவு, ரத்த அழுத்தம், சிறுநீரக நோய், மனநோய், தைராய்டு போன்ற நோய்களை அலோபதி மருத்துவத்தால் குணப்படுத்த முடியாது என்று கூறி பல ஆண்டுகளாக நோயாளிகள் உட்கொண்டு வந்த மாத்திரைகளை உபயோகிக்க வேண்டாம் என சொன்னதால், பல நோயாளிகள் மருத்துவச் சிக்கலுக்கு ஆளானதும் தெரிய வந்தது. சையது சுல்தான் மொஹைதீனின் கிளினிக்கில் சுகாதார அதிகாரிகள் சோதனை நடத்தினர். விசாரணையின் முடிவில் சையத் சுல்தான் போலி மருத்துவர் என்றும் கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து போலி மருத்துவர் மீது 15 (3) இந்தியன் மெடிக்கல் அசோசியேசன் சட்டம், மற்றும் 419, 420 ஆகிய பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி