வேலூர் : பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி வேலூர் மாவட்டத்தில் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியில் 500 போலீசார் ஈடுபடுத்தபட்டுள்ளனர். அவர்கள் மாவட்டம் முழுவதும் பொதுமக்கள் அதிகம் கூடும் பஸ்நிலையங்கள், மார்க்கெட், வணிகவளாகங்கள், வழிபாட்டு தலங்கள், ரெயில் நிலையங்களில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுதவிர முக்கிய மத வழிபாட்டு தலங்களுக்கு வரும் பக்தர்களின் உடைமைகள் மற்றும் பொருட்கள் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனை செய்யப்படுகிறது. வேலூர் கோட்டையிலும் வேலூர் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார், தலைமையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. நேற்று காலை முதல் கோட்டைக்கு வந்த பொதுமக்களின் உடைமைகளை போலீசார் சோதனை செய்து உள்ளே அனுப்பினர். கார், மோட்டார்சைக்கிள்களில் வந்தவர்களையும் சோதனை செய்தனர்.
காட்பாடி ரெயில் நிலையத்தில் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் சித்ரா, தலைமையில் போலீசார் தீவிர சோதனை நடத்தினர். காட்பாடி ரெயில் நிலையத்தின் ரெயில் நிலைய நுழைவு வாயில், பார்சல் அனுப்பும் இடம், நடைமேடை பகுதியில் பயணிகளின் உடைமைகள், மற்றும் காட்பாடி மார்க்கமாக செல்லும் அனைத்து ரெயில்களிலும் மெட்டல் டிடெக்டர் மூலம் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இதே போல் காட்பாடி ரெயில்வே பாதுகாப்பு படை போலீசாரும் சோதனை செய்தனர். அவர்கள் ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ் இணையத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணிப்பு கேமராக்கள் மூலம் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். வேலூர் மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன், உத்தரவின் பேரில் மாநில-மாவட்ட எல்லைப்பகுதிகளில் போலீசார் வாகன தணிக்கை மற்றும் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோவில், புதிய பஸ்நிலையம், காட்பாடி ரெயில் நிலையத்தில் வெடிகுண்டு கண்டுபிடிப்பு மற்றும் செயலிழப்பு பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் சேகரன், தயாளன் மற்றும் போலீசார் மெட்டல் டிடெக்டர் மற்றும் மோப்பநாய் உதவியுடன் வெடிகுண்டு சோதனை நடத்தினர்.
நமது குடியுரிமை நிருபர்
திரு. S. பாபு
தென்னிந்திய தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.
அரக்கோணம்