திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கு பாதுகாக்கும் விதமாக மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றம், மதுரை கிளை உத்தரவு பிறப்பித்த சாலைகளின் ஓரம் மற்றும் மையப் பகுதிகளில் (சென்டர் மீடியன்) தற்காலிக கொடி கம்பங்கள் அமைக்க கூடாது என்பது குறித்து அரசியல் கட்சி பிரமுகர்களை வலியுறுத்தும் கூட்டம் நடைபெற்றது. அனைத்து அரசியல் கட்சிகளும் தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு சொந்தமான சாலைகளின் இரு பக்கங்களிலும் சாலையின் மையத்திலும் கட்சியின் கூட்டம் நடைபெறும் நாட்கள் அரசியல் கட்சி தலைவர்களின் பிறந்தநாள் மற்றும் நினைவு நாள் தனியார் விழாக்கள் மற்றும் பொதுக்கூட்டங்கள் நடைபெறும் போது தற்காலிகமாக கொடிக்கம்பங்களை அமைக்கின்றன எனவும் அவ்வாறு கொடிக்கம்பங்கள் அமைக்கும் கட்சிகளின் நபர்கள் மீது எந்தவித நடவடிக்கைகளும் எடுக்கப்படுவதில்லை எனவும் இதனால் ஏற்படும் விபத்துகளால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் நீதிமன்றம் மூலமாக இழப்பீடு கோரி வழக்குகள் தொடர்ந்து வருகின்றனர் எனவும் இதனால் அவர்களுக்கான இழப்பீட்டுத் தொகை மக்கள் வரிப்பணத்தில் இருந்து வழங்கப்படுகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அவ்வாறு கொடிகள் அமைக்கப்படும் அரசியல் கட்சிகள் மீது நடவடிக்கை மேற்கொள்ளவும் உத்தரவிடப்பட்டுள்ளது.இது தொடர்பாக உட்கோட்டளவில் அனைத்து கட்சி கூட்டத்தினை கூட்டி மேற்படி அரசியல் கட்சி பிரமர்களுக்கு மாண்பமை உயர் நீதிமன்ற உத்தரவினை எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு நீதிமன்றத்தின் சார்பில் உத்தரவிடப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் பொன்னேரி சார் ஆட்சியர் ரவிக்குமார் தலைமையில் கோட்டாட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் அனைத்து அரசியல் கட்சிகளும் கலந்து கொண்ட கூட்டம் நடைபெற்றது. இதில் மேற்கண்ட தகவல்களை அரசியல் கட்சி பிரமுகர்கள் புரிந்து கொள்ளும் வண்ணம் சாராட்சியர் விளக்கம் அளித்தார்.
மேலும் இதனை நடைமுறை படுத்தும் விதத்தில் தங்களது அரசியல் கட்சிகள் மத்தியில் இதனை வலியுறுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். இந்த கூட்டத்தில் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் செல்வகுமார், பொன்னேரி வட்டாட்சியர் சோமசுந்தரம்,மீஞ்சூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ரவி,பொன்னேரி வழக்கறிஞர்கள் சங்க பொதுச் செயலாளர் பெரவள்ளூர். ராஜா,திமுக,அதிமுக,பாஜக,காங்கிரஸ்,கம்யூனிஸ்ட்,புரட்சி பாரதம் உள்ளிட்ட பல்வேறு கட்சியினை சேர்ந்த பிரமுகர்கள்,அனைத்து துறைகளை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. பாபு