திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி நகராட்சிக்குட்பட்ட 1வது வார்டு குன்னமஞ்சேரி இந்திரா நகரில் ஆரணி ஆற்றங்கரை ஒட்டிய நீர்நிலை அல்லாத பகுதியில் சுமார் 60க்கும் மேற்பட்ட தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினர் பட்டா நிலத்தில் நெடுங்காலமாக வீடு கட்டி வசித்து வருகின்றனர். கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதிக்கு அருகாமையில் இருக்கும் கிராமமான ஆரணி ஆற்றங்கரையின் எதிரில் இருக்கும் வைரவன் குப்பம் பகுதியில் அரசால் சவுடு மணல் எடுக்க அனுமதி வழங்கப்பட்டு அதன்படி அப்பகுதிக்கு செல்ல இப்பகுதி மக்கள் வசிக்கும் ஆற்றங்கரையை ஒட்டி கரையை கரைத்து கனரக லாரி வாகனங்கள் சென்றுவர அவர்களுக்கு பாதை ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டது.
பின்பு அவ்வாறு மணல் எடுக்கும் பணிகள் நிறைவு பெற்றவுடன் அந்த குடியிருப்பு பகுதியின் அருகாமையில் ஆற்றின் கரையை கரைத்த இடத்தில் எவ்வித சீரமைப்பு பணிகளும் மேற்கொள்ளாமல் விட்டு விட்டு சென்று விட்டனர்.இது குறித்து அப்பகுதி மக்கள் உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் எவ்வித பயணம் ஏற்படவில்லை. இதனால் கடந்த மழை காலத்தில் ஆற்றில் நீர் அதிகமானதாலும் ஆந்திர மாநிலம் பிச்சாட்டூர் அணையை திறந்ததாலும் ஆற்றில் நீர்வரத்து அதிகமாகி சவுடு மணல் எடுப்பதற்காக கரைந்த பாதையின் வழியாக வெள்ள நீர் ஊருக்குள் புகுந்தது. இதனால் அப்பகுதி மக்கள் மிகுந்த இன்னலுக்கு ஆளானபோது அப்பகுதிக்கு வருகை தந்த அதிகாரிகள் வெள்ளம் ஏற்பட காரணமான அப்பகுதியை பார்வையிட்டு மழைக்காலம் முடிந்ததும் கரையை சீரமைத்து தருவதாக உறுதியளித்தனர். ஆனால் இதுவரையில் எவ்வித சீரமைப்பு பணிகளும் செய்யப்படவில்லை. இதனால் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பொன்னேரி கோட்டாட்சியர் கனிமொழியிடம் இந்திரா நகர் ஒட்டிய ஆற்றங்கரையான சவுண்டு மணல் எடுத்ததற்காக கரைக்கப்பட்ட கரையினை இந்த கோடைகாலத்திற்குள் சரிசெய்து அடுத்த வரப்போகும் மழைக்காலங்களில் அப்பகுதிக்குள் வெள்ளப்பெருக்கு ஏற்படாமல் தடுத்திட வேண்டி நடவடிக்கை எடுக்க கோரிக்கை மனு அளித்தனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. பாபு