வெயில் காலம் சாதாரண மனிதர்களையே வாட்டி வதைக்கும். சர்க்கரை நோயாளிகள் என்றால் கேட்கவே வேண்டாம். அவர்கள் மிகவும் சோர்ந்து போகக்கூடும். மற்றவர்கள் ஜூஸ் அது இது என்று என்ன வேண்டுமானாலும் சாப்பிடலாம். ஆனால் சர்க்கரை நோயாளிகள் காண்பதை எல்லாம் சாப்பிட முடியாது. அதனால் இந்த சமயத்தில் அவர்கள் தங்களை எப்படி காத்துக் கொள்வது. சர்க்கரை நோயாளிகள் பொதுவாகவே இனிப்பு, காரம், எண்ணெய், புளிப்பு, அதிக கொழுப்புச் சத்துள்ள உணவுகள் ( கிரீம் மில்க், ஐஸ்கிரீம்), பொரித்த உணவுகள், மண்ணுக்குக் கிழே விளையும் காய்கறிகள், கிழங்கு வகைகள் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும். சர்க்கரை நோயாளிகள் நேரத்திற்கு சாப்பிட வேண்டும். உணவினை வயிறு முட்ட அளவுக்கு அதிகமாக சாப்பிடக்கூடாது. சாப்பிடாமலும் இருக்கக்கூடாது. உணவினை மூன்று வேளையாக சாப்பிடாமல் கொஞ்சம் கொஞ்சமாக ஆறு வேளைகளாக பிரித்து சாப்பிடலாம். காலை எட்டு மணி, பதினோரு மணி, மதியம் ஒரு மணி, மாலை 4 மணி, ஆறு மணி, இரவு எட்டு மணி என இப்படி பிரித்து சாப்பிட வேண்டும். இதற்கிடையில் வெயில் நேரம் என்பதால் திரவ உணவுகள் எடுத்துக்கொள்ள வேண்டும். அதற்காக சர்க்கரை போட்ட ஜூஸ் ஆகியவை குடிக்கக் கூடாது. சர்க்கரை நோயாளிகளுக்கென்று சில கட்டுப்பாடுகள் உண்டு. பொதுவாக வெயில் காலத்தில் அனைவருக்குமே வியர்வை நிறைய வெளியேறும், அதனால் உடலில் நீர்ச்சத்து குறைந்து போகும் என்பதால் சர்க்கரை நோயாளிகள் தண்ணீர் நிறைய குடிக்க வேண்டும்.
இளநீர் குடிக்க வேண்டும். தயிர் அவ்வளவாக வேண்டாம். அதற்குப் பதிலாக கொழுப்பு நீக்கிய மோர் குடிக்கலாம். சிறிதளவு வெந்தயம் சேர்த்தும் மோர் குடிக்கலாம். எலுமிச்சைச் சாறு குடிக்கலாம். சர்க்கரை போட வேண்டாம். அதற்குப் பதில் அரை உப்புப் போட்டு எலுமிச்சைச் சாறை குடிக்கலாம். நீராகாரம் சாப்பிடலாம். கூழ் கரைத்துச் சாப்பிடலாம். மோர் கலந்து பச்சை வெங்காயம் சேர்த்து சாப்பிடலாம். இது போன்ற திரவ உணவுகளை உணவுஇடைவேளைகளில் எடுத்துக் கொள்ளலாம். தூங்கும் போது பாலில் பாதாம் பொடி கலந்து சாப்பிடலாம். உணவில் நிறைய பச்சை காய்கறிகள், கீரை வகைகள் சேர்த்துக்கொள்ள வேண்டும். வெயில் காலத்தில் பூசணிக்காய், வெள்ளரிக்காய், சுரைக்காய், புடலங்காய், வெண்டைக்காய் போன்ற காய்கறிகள் அதிகம் எடுத்துக்கொள்ளலாம். முள்ளங்கி கீரை, அரைக்கீரை, தண்டுக்கீரை, முருங்கைகீரை மற்றும் அகத்தி கீரை போன்ற கீரை வகைகள் எடுத்துக்கொள்ளலாம். வாழைக்காய் சாப்பிட வேண்டாம். அதற்கு பதில் வாழைத்தண்டுசாப்பிடலாம்.
காய்களை அவித்து சாப்பிடுதல் நல்லது. பச்சையாக சாப்பிடலாம். காலை பதினோரு மணி அளவில் ஃப்ரூட் சாலட், காய்கறி சாலட் போன்றவற்றை சாப்பிட வேண்டும். தர்பூசணி, முலாம் பழம், கிர்ணி பழம் போன்ற நீர்ச்சத்துள்ள பழங்கள் எடுக்கலாம். இனிப்பு சேர்க்க வேண்டாம். இனிப்பான பழங்களை கொஞ்சமாக எடுத்துக்கொள்ள வேண்டும். தக்காளி, அத்திப்பழம் போன்றவிதையிருக்கும் பழங்கள் சாப்பிடலாம். வெயில் காலத்தில் பச்சரிசியை தவிர்க்கலாம். ஜீரணமாக
தாமதமாகும். கேழ்வரகு உணவு வகைகளை சாப்பிடலாம். பீட்சா, பர்கர் போன்றவை எப்போதும் வேண்டாம். பிரியாணி வேண்டவே வேண்டாம். மாலை நேரங்களில் கடலை, பயறு வகைகள் வேக வைத்து சாப்பிடலாம். வெயில் காலத்தில் வேர்க்கடலை வேண்டாம். ஜீரணமாகாது. புரதச் சத்து அதிகமுள்ள உணவுகளை எடுத்துக்கொள்ளலாம். மாலை நேரங்களில் கேழ்வரகு பிஸ்கெட் சாப்பிடலாம். கோதுமை பிஸ்கெட் சாப்பிடலாம்.
வெளியிடங்களில் சாப்பிட வேண்டாம். தவிர்க்க முடியாத நேரத்தில் மட்டுமே ஹோட்டல்களில் சாப்பிட வேண்டும். வீட்டில் எண்ணெய், மசாலா போன்றவற்றை குறைவாக பயன்படுத்துவோம். ஹோட்டல்களில் மசாலா மற்றும் எண்ணெய் அதிகமாக பயன் படுத்துவார்கள். அதுமட்டுமல்லாமல் அஜினோமோட்டோ மற்றும் நிறமூட்டிகளையும் பயன்படுத்தி செய்வார்கள் என்பதால் வெளியிடங்களில் சாப்பிடாமல் இருத்தல் நல்லது. வெளியே செல்லும் போது ஓட்டலில் சாப்பிட வேண்டிய அவசியம் வந்தால் சுத்தமாக இருக்கும் ஓட்டல்களில் இட்லி, இடியாப்பம் போன்ற ஆவியில் வேகவைத்த உணவுகள் மற்றும் தயிர் மற்றும் சாம்பார் சாதம் போன்றவற்றை சாப்பிடலாம். பொரித்தது, வறுத்தது எல்லாம் வேண்டாம். அது கூட ஓரிரு நாள் தான் வெளியில் சாப்பிடலாம். நான்வெஜ் வெளியில் சாப்பிட வேண்டாம். பொதுவாக சர்க்கரை நோயாளிகள் பாட்டில் மற்றும் டின்களில் அடைத்து விற்கப்படும் கூல்டிரிங்க்ஸ் மற்றும் ரெடிமேட் உணவுகளை தவிர்க்க வேண்டும். ஜாம், சாஸ், நூடுல்ஸ் போன்ற பொருட்களையும் தவிர்க்க வேண்டும்.சத்துள்ள உணவுகள் சாப்பிட வேண்டும்.
விருந்துகளுக்கு செல்லும் போது என்ன சாப்பிட வேண்டும், என்ன சாப்பிடக்கூடாது என்று யோசித்துப் பார்த்து சாப்பிட வேண்டும். சுய சிந்தனை வேண்டும். மற்றவர்கள் வற்புறுத்தினாலும் நம் உடல் குறித்து நாம் தான் அக்கறை செலுத்த வேண்டும். அதற்கேற்றபடி சாப்பிடுவது நல்லது. பொதுவாக நம்ம ஊர் சூழ்நிலைக்கு நமது பாரம்பரிய உணவுகளான கம்பு, வரகு, சாமை, குதிரைவாலி, தினை போன்றவற்றை வருடத்தில் 365 நாளும் சாப்பிடலாம். முளைகட்டின பயறு சாலட் காலை
11 மணி போல சாப்பிடலாம். சர்க்கரை நோயாளிகள் யோகா செய்வது அவசியம். வெயில் வருவதற்கு முன் காலை நேரத்தில் வெயில் தாழ்ந்த பின் மாலை நேரத்தில் யோகா மேற்கொள்வது நல்லது அல்லது நிழலில் பயிற்சி மேற்கொள்வது நல்லது.
பயண_நேரங்களில்… சர்க்கரை நோயாளிகள் வெயிலில் அலைச்சலை குறைத்துக்கொள்வது நல்லது. வெளியே செல்லும் போது கட்டாயம் தண்ணீர் எடுத்து செல்வது நல்லது. சர்க்கரை நோயாளிகள் வயதானவர்களாக இருந்தால் வெயிலில் வெளியே செல்ல நேர்ந்தால் தலைவலி, மயக்கம் போன்றவை ஏற்படலாம் என்பதால் துணைக்கு யாரையாவது அழைத்துப் போகலாம். மற்ற எல்லாரையும் போல் சர்க்கரை நோயாளி களும் இந்த விடுமுறை காலத்தில் குடும்பத்தோடு வெளியூர் செல்ல வேண்டி வரலாம். ரயில் அல்லது பேருந்து பயணங்கள் மேற்கொள்ள நேரிடலாம். அந்த சமயங்களில் வீட்டில் இருப்பது போல் நேரத்திற்கு உணவு சாப்பிட முடியாது. ஆனால் சரியான நேரத்திற்கு அவர்கள் உணவு எடுத்துக்கொள்வது அவசியம். சரியான உணவு இல்லையெனில் அவர்களின் எனர்ஜி டவுனாகி விடும். சர்க்கரை நோயாளிகள் பயணங்களின் போதும் வெளியே வாங்கி சாப்பிடாமல் அதே சமயம் ஆரோக்யமான உணவு சாப்பிட வேண்டுமானால் கையில் என்னென்ன உணவு வகைகள் கொண்டு செல்லலாம்.
ராகி_கூழ் ராகி கூழ் பெரும்பாலான வீடுகளில் செய்வார்கள். அதனை எடுத்துச் செல்லலாம். மோர் கலந்து சாப்பிடலாம். முளைகட்டின_பயறு மாவு காயவைத்து அரைத்த முளைகட்டின பயறு மாவை எடுத்துச் சென்றால் அதனுடன் சுடுநீரோ அல்லது பாலோ கலந்து சாப்பிடலாம். அவல், சிவப்பு அவலை ஒரு டப்பியில் போட்டு எடுத்துச் செல்லலாம். சாப்பிடுவதற்கு ஒரு 20 நிமிடங்களுக்கு முன் அதனை நீர் ஊற்றி ஊற வைத்து பின் அதில் பால் கலந்து சாப்பிடலாம். பழங்களும் கூட கலந்து சாப்பிடலாம். பழங்கள் ஃப்ரூட் சாலட் தயார் செய்து எடுத்துச் செல்லாம் அல்லது ஒரு ஆப்பிள் சாப்பிடலாம். வெள்ளரிக்காய் சாப்பிடலாம். ராகிஉருண்டை அடுப்பில் ஒரு பாத்திரத்தில் வறுத்த ராகி மாவு போட்டு அதில் கொஞ்சம் கொஞ்சமாக சுடுநீர் கலந்து அது களி பதத்திற்கு வரும் வரை கிளறி அதை தட்டில் எடுத்து தண்ணீர் தொட்டு உருண்டைகளாக்கி ஆறிய பின் அதை ஒரு டிபன் பாக்ஸில் தண்ணீரில் போட்டு எடுத்துச் செல்லலாம். தேவைப்படும் போது அதே தண்ணீரிலோ அல்லது வேறு தண்ணீர் ஊற்றியோ அல்லது மோரிலோ கரைத்து சாப்பிடலாம்.
அவசியம் சாப்பிட வேண்டியவை : நாளைக்கு ஒரு முறை வெந்தயம் இரவில் ஒரு கை தண்ணிரில் ஊரவைத்து காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். வெந்தயத்தை மென்று சாப்பிட வேண்டும். நாட்களுக்கு ஒரு முறை நெல்லிகாய் ஜூஸ், நாட்களுக்கு ஒரு முறை பாகற்காய் ஜூஸ், நாட்களுக்கு ஒரு முறை சிறு தானிய உணவுகள் எடுத்து கொள்ள வேண்டும். நாட்களுக்கு ஒரு முறை வேப்பம்பூ கலந்த ரசம் சாப்பிடலாம். நாட்களுக்கு ஒரு முறை ஆவாரம்பூ டீ குடித்து வரவும். நாட்களுக்கு ஒரு முறை இலவங்கப்பட்டை தண்ணீரில் போட்டு அதை நாள் முழுவதும் குடிக்க வேண்டும்.வெள்ளை சர்க்கரை தவிர்த்து நாட்டு சர்க்கரை சேர்த்திட வேண்டும்.