சென்னை: கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஜவகர் நகர், சிவ இளங்கோ சாலையில் வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் (CMDA) சார்பில் ரூ. 11.37 கோடி மதிப்பில் கட்டப்பட்ட ஒருங்கிணைந்த காவல் அலுவலகக் கட்டடத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்தார். இந்த புதிய கட்டடத்தில் கொளத்தூர் காவல் துணை ஆணையாளர் அலுவலகம், K-5 பெரவள்ளூர் காவல் நிலையம், போக்குவரத்து காவல் நிலையம் மற்றும் மாவட்ட சைபர் குற்றப் பிரிவு ஆகியவை ஒரே வளாகத்தில் செயல்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் பொதுமக்கள் பல்வேறு காவல் சேவைகளை ஒரே இடத்தில் எளிதாக பெறும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
திறப்பு விழாவிற்குப் பிறகு, முதலமைச்சர் அவர்கள் “நம்பிக்கை இருக்கை”யில் அமர்ந்து பொதுமக்களிடமிருந்து நேரடியாக மனுக்களை பெற்றுக்கொண்டார். மக்கள் குறைகளை உடனுக்குடன் கேட்டறிந்து, அவற்றை தீர்க்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு உயரதிகாரிகள் மற்றும் காவல் துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
சென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.முகமது மூசா
















