மேற்குவங்கம்: கொல்கத்தா காவல்துறையின் முதல் பெண் அதிகாரி தேபோஸ்ரீ சாட்டர்ஜி, அவரது ஓட்டுனர் மற்றும் பாதுகாப்பு காவலர் ஆகியோர் கொல்கத்தாவில் நடந்த கார் விபத்தில் உயிரிழந்தனர். கொல்கத்தா காவல் துறையின் முதல் பெண் அதிகாரியான தேபோஸ்ரீ சாட்டர்ஜி நேற்று நடந்த கார் விபத்தில் உயிரிழந்தார்.
இவருடன் அவரது ஓட்டுநர் மற்றும் பாதுகாப்புக்கு வந்த காவலர் ஆகியோரும் உயிரிழந்தனர். மூன்று காவல்துறையினர் உயிரிழந்தது, கொல்கத்தா காவல் துறையினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
தற்போது ஆயுதப்படை பன்னிரண்டாவது(CO12) பட்டாலியன் கமாண்டராக உள்ள தேபோஸ்ரீ சாட்டர்ஜி அவரது காப்பாளர் தபஸ் வர்மன் மற்றும் ஓட்டுநர் மனோஜ் ஆகியோர் பயணித்த வாகனம் வெள்ளிக்கிழமை காலை தேசிய நெடுஞ்சாலையில் மணல் லாரி ஒன்றின் மீது மோதியது. விபத்தில் மூவரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். விபத்திற்கான காரணம் குறித்து காவல்துறை கூறுகையில், ஓட்டுநர் தூக்கக்கலக்கத்தில் இருந்ததால், கட்டுப்பாட்டை இழந்து இருக்கலாம் என்று கூறியுள்ளனர்.
காவல்துறையில் தனது 32 ஆண்டுகால சேவையின் போது, தேபோஸ்ரீ சாட்டர்ஜி கொல்கத்தா காவல்துறையின் துப்பறியும் துறை, சைபர் செல் மற்றும் பெண்கள் குறைதீர்க்கும் களத்தில் தலைவராக இருந்துள்ளார்ஃ மேலும் இவரது பணிக்காக வெகுவாக பாராட்டப்பட்டவர்.
தேபோஸ்ரீ சாட்டர்ஜி கொல்கத்தா காவல்துறையில் நியமிக்கப்பட்ட முதல் பெண் போலீஸ் அதிகாரி ஆவார். இதற்கிடையில் மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, மேற்கு வங்கத்தின் மூத்த அதிகாரிகள், மேற்கு வங்காளத்தின் டி.ஐ.ஜி போக்குவரத்து, ஹூக்லி மாவட்ட எஸ்.பி. ஆகியோர் மூவர் இழப்பிற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.