ஈரோடு: சிவகிரி அருகே உள்ள குமரவலசை சேர்ந்தவர் ராவுத் குமார். விவசாயி, இவரது மனைவி திவ்யபாரதி(24).இவர்களுக்கு 1 வயதில் மகன் உள்ளான். இந்த நிலையில் திவ்யா பாரதியின் தந்தை நட்ராஜ் நேற்றுமுன்தினம் காலை செல்போனில் தொடர்பு கொண்டுள்ளார். அப்போது போனை எடுக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த நடராஜ் குமரவலசுக்கு சென்று மகளை பார்த்து உள்ளார்.அப்போது வீட்டில் திவ்யபாரதி உடலில் ரத்த காயங்களுடன் கொலை செய்யப்பட்டு கிடந்தது தெரியவந்தது.
இதுகுறித்து நட்ராஜ் சிவகிரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் கொடுமுடி காவல் ஆய்வாளர் முருகன் வழக்குப்பதிவு செய்து இளம்பெண் கொலை குறித்து விசாரணை நடத்தி வந்தனர்.
விசாரணையில் ராவுத் குமாரின் பெற்றோர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறியதால் சந்தேகமடைந்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இதில் நேற்று முன்தினம் அதிகாலையில் ராவுத் குமாருக்கும்,அவரது மனைவி திவ்யபாரதிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கோபமடைந்த ராவுத் குமார் தாய் ஈஸ்வரி தந்தை சதாசிவம் ஆகியோர் இரும்பு கம்பியால் அடித்து,தலையணையை வைத்து அமுக்கி திவ்யபாரதியை கொலை செய்தது தெரிய வந்தது.
இதையடுத்து போலீசார் ராவுத் குமார், சதாசிவம், ஈஸ்வரி ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.