தூத்துக்குடி : தூத்துக்குடி சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கே.டி.சி நகரில் வசித்து வரும் பிரேம்குமார் (வயது27) என்பவர் அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.
இதுகுறித்து, தகவலறிந்த சிப்காட் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிரேம்குமார் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்கு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டார். இதையடுத்து கொலையாளிகளை கைது செய்ய தூத்துக்குடி ஊரக காவல் துணை கண்காணிப்பாளர் பொன்னரசு மேற்பார்வையில் சிப்காட் காவல் நிலைய காவல்ஆய்வாளர் முத்துசுப்பிரமணியன் தலைமையில் உதவி ஆய்வாளர்கள் முத்து கணேஷ், நம்பிராஜன் மற்றும் ராஜ பிரபு மற்றும் காவல்துறையினர் அடங்கிய 3 தனிப்படைகள் அமைத்து உத்தரவிட்டார்.
அதன்படி மேற்படி தனிப்படையினர் விசாரணை மேற்கொண்டதில் கொலையுண்ட பிரேம்குமார் என்பவருக்கும், தூத்துக்குடி டூவிபுரத்தைச் சேர்ந்த அய்யாத்துரை மகன் விக்னேஷ்வரன் (வயது33) மனைவிக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்தததாகவும், அதன் காரணமாக ஆத்திரமடைந்த விக்னேஷ்வரன், அவனது சகோதரர் மற்றும் கூட்டாளிகளுடன் சேர்ந்து பிரேம்குமாரை கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது.
அதனடிப்படையில், தூத்துக்குடி டூவிபுரத்தைச் சேர்ந்த அய்யாத்துரை மகன் விக்னேஷ்வரன் (வயது 33), அவரது சகோதரர் இசக்கி கணேஷ் (வயது 30), புதுக்கோட்டை அய்யனார் காலணியைச் சேர்ந்த பூல்பாண்டி மகன் முத்துப்பாண்டி (வயது 30), ஸ்ரீவைகுண்டம் அணியாபரநல்லூரைச் சேர்ந்த பாலசுப்பிரமணிய்ன மகன் சங்கர் கணேஷ் (வயது 30), புதுக்கோட்டை அய்யனார் காலனியைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகன் லெட்சுமணன் (வயது 25) மற்றும் தூத்துக்குடி கே.டி.சி நகரைச் சேர்ந்த பழனிச்சாமி மகன் கருப்பசாமி (வயது 25) ஆகிய 6 பேரையும் தனிப்படையினர் அதிரடியாக கைது செய்தனர்.
சம்பவம் நடந்த 24 மணி நேரத்தில் பிரேம்குமார் கொலை வழக்கில் அதிரடியாக விரைந்து கைது செய்த தனிப்படை காவல்துறையினரை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஜெயக்குமார் பாராட்டினார்.