தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம், தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தூத்துக்குடி அந்தோணியார்புரம் 3 சென்ட் பகுதியை சேர்ந்த சோலையப்பன் மகன் மாரிமுத்து (38), என்பவரை நேற்று (13.11.2022) அதே பகுதியில் வைத்து மர்ம நபர்கள் அரிவாளால் தாக்கி கொலை செய்து அதை தடுக்கவந்த அவரது 15 வயது மகனையும் அரிவாளால் தாக்கியுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த தென்பாகம் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாரிமுத்துவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கும், அவரது மகனை சிகிச்சைக்காகவும் தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் குறித்து தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன் அவர்கள் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு தூத்துக்குடி நகர காவல் துணை கண்காணிப்பாளர் திரு. சத்தியராஜ் அவர்கள் மேற்பார்வையில் தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் திரு. ராஜாராம் தலைமையிலான போலீசாருக்கு சம்மந்தப்பட்ட குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய உத்தரவிட்டார்.
அவரது உத்தரவின்பேரில் மேற்படி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டதில், கொலையுண்ட மாரிமுத்து என்பவருக்கும், தூத்துக்குடி அந்தோணியார்புரம் 3 சென்ட் பகுதியை சேர்ந்த சண்முகவேல் மகன் முகேஷ் (29) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்த முன்விரோதம் காரணமாக முகேஷ் மற்றும் அவரது நண்பர்களான தூத்துக்குடி சக்திநகர் பகுதியை சேர்ந்த தங்கமாரி மகன் பத்திரகாளி முத்து (எ) முத்துப்பாண்டி (27) தூத்துக்குடி எஸ்.என்.ஆர் நகரை சேர்ந்த ஜெயராஜ் மகன் ஜெய முத்துலிங்கம் (25) மற்றும் சிலர் ஆகியோர் சேர்ந்து மேற்படி சம்பவ இடத்தில் வைத்து மாரிமுத்துவை அரிவாளால் தாக்கி கொலை செய்தும், அதை தடுக்க வந்த அவரது மகனையும் அரிவாளால் தாக்கியதும் விசாரணையில் தெரியவந்தது. உடனே மேற்படி போலீசார் குற்றவாளிகளான முகேஷ், பத்திரகாளி முத்து (எ) முத்துப்பாண்டி மற்றும் ஜெய முத்துலிங்கம் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். மேலும் இதுகுறித்து தென்பாகம் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேற்படி கைது செய்யப்பட்ட குற்றவாளிகளில் ஏற்கனவே குற்றவாளி முகேஷ் மீது தென்பாகம் காவல் நிலையத்தில் 2 கொலை மிரட்டல் வழக்குகளும், குற்றவாளி ஜெய முத்துலிங்கம் மீது பசுவந்தனை காவல் நிலையத்தில் ஒரு போக்சோ வழக்கும் உள்ளது குறிப்பிடதக்கது.