தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், முத்தையாபுரம் காவல் நிலையம் முள்ளக்காடு, தேவிநகரை சேர்ந்தவர் பொன்னுச்சாமி மகன் கணேசன் என்ற சின்னவன்(46) இவரது மனைவி அய்யம்மாள் 37/13. இவர்கள் இருவரும் உப்பள தொழிலாளியாக வேலை பார்த்து வந்தனர்.
இந்நிலையில் அய்யம்மாளுக்கும் அவருடன் வேலை செய்துவந்த முத்தையாபுரம், முனியசாமிபுரத்தைச் சேர்ந்த தங்கவேலு என்பவருக்கும் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதனை கணேசன் கண்டித்துள்ளார். அதேபோன்று தங்கவேலுவின் உறவினர்களான பழனிமுருகன்(29), சந்தனமாரி(25), வள்ளிமயில்(45) ஆகியோரும் கண்டித்துள்ளனர்.
இதற்கிடையில் கடந்த 28.06.2013 அன்று அய்யம்மாள் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது கணேசன் என்ற சின்னவன் வீட்டிலிருந்த மண்ணெண்ணையை எடுத்து அய்யம்மாள் மீது ஊற்றி தீவைத்து எரித்து கொலை செய்துள்ளார்.
இதுகுறித்து முத்தையாபுரம் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து கணேசன் என்ற சின்னவன், பழனிமுருகன், சந்தனமாரி, வள்ளிமயில் மற்றும் தங்கவேலு ஆகிய 5 பேரையும் கைது செய்தனர். இந்த வழக்கு தூத்துக்குடி 2வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
06.11.2019 அன்று இந்த வழக்கை விசாரித்த நீதிபதி திரு. கௌதமன் குற்றம்சாட்டப்பட்ட கணேசன் என்ற சின்னவனுக்கு ஆயுள் தண்டனையும் ரூபாய் 10,000/- அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார். மற்ற 4 பேரையும் விடுதலை செய்து உத்தரவிட்டார்.
இவ்வழக்கை விசாரித்த அப்போதய முத்தையாபுரம் காவல் நிலைய காவல் ஆய்வாளர் திரு.ஹரிகரன், தற்போது விருதுநகர், சூலக்கரை காவல் நிலைய ஆய்வாளராக பணியாற்றி வருகின்றார்.