திருவாரூர்: திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், M.Sc., (Agri.) அவர்கள் உத்தரவின் பேரில் மாவட்டத்தில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு பல்வேறு குற்றவழக்குகளில் தொடர்புடைய நபர்களின் வீடுகளில் அதிரடி தணிக்கை செய்தல் மற்றும் நீண்ட நாட்களாக தலைமறைவாக உள்ள குற்றவாளிகளை தேடி, கண்டுபிடித்து கைது செய்து உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.அதன் அடிப்படையில் திருவாரூர் தாலுக்கா காவல் நிலைய சரகம் காட்டூர் கிராமத்தில் கடந்த 2019-ம் ஆண்டு வெட்டி படுகொலை செய்யப்பட்ட முத்துகிருஷ்ணன் என்பவரின் நெருங்கிய நண்பரான கலைச்செல்வன் (வயது-28). த/பெ.பழனிவேல், மாரியம்மன் கோவில் தெரு, அகரத்திருநல்லூர் என்பவர் தனது நண்பர் முத்துகிருஷ்ணன் கொலைக்கு பழிவாங்கும் விதமாக கடந்த 2021-ம் ஆண்டு காட்டூர் கிராமத்தை சேர்ந்த குமரேசன் என்பவரை கூலி படையினரை வைத்து வெட்டி படுகொலை செய்தார்.
இவ்வழக்கில் கலைச்செல்வன் முக்கிய குற்றவாளியாவர். மேலும் இவர் மீது திருவாரூர் மாவட்டத்தில், திருவாரூர் தாலுக்கா காவல் நிலையம், கொரடாச்சேரி காவல் நிலையம், குடவாசல் காவல் நிலையம் மற்றும் தஞ்சாவூர் மாவட்டத்திலும் பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற நிலுவையில் உள்ளது.குமரேசன் கொலை வழக்கிற்காக சிறை சென்று நீதிமன்ற பிணையில் வெளிவந்த பின்னர் தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்தார். குமரேசன் கொலை வழக்கில் இவருக்கு நீதிமன்ற பிடிக்கட்டளை பிறப்பிக்கப்பட்டு நிலுவையில் உள்ளது. அதேபோல் கடந்த ஆண்டு குடவாசல் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட கஞ்சா கடத்திய வழக்கிலும், தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்தார்.
தொடர்ந்து தலைமறைவாக இருந்தவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு வெளி மாநிலங்களான கேரளா, பாண்டிச்சேரி, தமிழகத்தில் சென்னை, கோவை, நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து தேடி வந்த நிலையில் (11.02.2024) விருதுநகர் மாவட்டம் சிவகாசி பகுதியில் தனிப்படையினரால் கைது செய்யப்பட்டு, பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சிறப்பாக செயல்பட்டு தலைமறைவாக இருந்த பிடிக்கட்டளை குற்றவாளியை கைது செய்த உதவி ஆய்வாளர் திரு.D.சரவணன் தலைமையிலான மாவட்ட தனிப்படையினரை திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், M.Sc., (Agri.) அவர்கள் வெகுவாக பாராட்டினார்கள்.