தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் புளியம்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அக்கநாயக்கன்பட்டி பகுதியின் பஞ்சாயத்து தலைவரான அக்கநாயக்கன்பட்டி தெற்கு காலனி பகுதியை சேர்ந்த மாடசாமி மகன் அய்யாதுரை 67. என்பவருக்கும், அதே பகுதியை சேர்ந்த மாடசாமி மகன் ரஞ்சித் 28. என்பவருக்கும் இடையே தேர்தல் சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
இந்த முன்விரோதம் காரணமாக நேற்று 24.11.2022 மேற்படி அய்யாதுரை, அவரது மகன் கலாநிதி 40. என்பவருடன் அக்கநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள சமுதாய நலக்கூடத்தின் முன்பு நின்று கொண்டிருந்தபோது, அங்கு வந்த மேற்படி ரஞ்சித் அய்யாத்துரையிடம் தகராறு செய்து அவரையும் அவரது மகன் கலாநிதியையும் அரிவாளால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
இதுகுறித்து அய்யாதுரை அளித்த புகாரின் பேரில் புளியம்பட்டி காவல் நிலைய ஆய்வாளர் (பொறுப்பு) திரு. முத்துராமன் வழக்குபதிவு செய்து மேற்படி குற்றவாளி ரஞ்சித்தை கைது செய்தார்.
மேற்படி கைது செய்யப்பட்ட குற்றவாளி ரஞ்சித் மீது ஏற்கனவே புளியம்பட்டி காவல் நிலையத்தில் கொலை, கொலை முயற்சி உட்பட 5 வழக்குகளும், மணியாச்சி காவல் நிலையத்தில் ஒரு கொலை மிரட்டல் வழக்கும் என 6 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.