தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு.எல். பாலாஜி சரவணன் அவர்கள் உத்தரவின்படி தூத்துக்குடி திரு.நகர காவல் துணை கண்காணிப்பாளர் திரு. சத்தியராஜ் மேற்பார்வையில் முத்தையாபுரம் காவல் நிலைய ஆய்வாளர் திரு. ஜெயசீலன் மற்றும் உதவி ஆய்வாளர் திரு. ராஜபிரபு தலைமையிலான தனிப்படை போலீசார் கடந்த (13.01.2023) ரோந்து பணியில் ஈடுபட்டபோது முத்தையாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முத்தையாபுரம் தவசிபெருமாள் ரோடு சந்திப்பு பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்தவர்களை பிடித்து விசாரணை செய்ததில், அவர்கள் முத்தையாபுரம் முள்ளக்காடு, முனியசாமி நகரை சேர்ந்த கணேசன் மகன் ரமேஷ் (எ) 2ஜிபி ரமேஷ் (28) மற்றும் முத்தையாபுரம் முள்ளக்காடு, சாமிநகரை சேர்ந்த இசக்கி மகன் ஆறுமுகம் 24. ஆகியோர் என்பதும் அவர்கள் அப்பகுதியில் வந்து கொண்டிருந்த ஒருவரை வழிமறித்து பணம் கேட்டு தகராறு செய்து கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்ததும் தெரியவந்தது.
உடனே மேற்படி போலீசார் குற்றவாளிகளான ரமேஷ் (எ) 2ஜிபி ரமேஷ் மற்றும் ஆறுமுகம் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். மேலும் இதுகுறித்து முத்தையாபுரம் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேற்படி கைது செய்யப்பட்ட குற்றவாளிகளில் ரமேஷ் (எ) 2 ஜிபி ரமேஷ் மீது ஏற்கனவே முத்தையாபுரம் காவல் நிலையத்தில் கொலை முயற்சி, கஞ்சா வழக்குகள் உட்பட 11 வழக்குகளும், ஓட்டப்பிடாரம் காவல் நிலையத்தில் ஒரு வழக்கும், தெர்மல்நகர் மற்றும் சிப்காட் காவல் நிலையத்தில் ஒரு திருட்டு வழக்கும் என 14 வழக்குகளும், குற்றவாளி ஆறுமுகம் மீது முத்தையாபுரம் காவல் நிலையத்தில் கொலை முயற்சி வழக்குகள் உட்பட 4 வழக்குகளும், குரும்பூர் காவல் நிலையத்தில் ஒரு கஞ்சா வழக்கும் என 5 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.