தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், ஓட்டபிடாரம், முப்பிலிபட்டி கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம் மகன் மாரியப்பன் (51) என்பவர், முத்தையாபுரம் பகுதியில் நடமாடும் பஞ்சர் பார்க்கும் வாகனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் இன்று (19.12.2020) முத்தையாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முடுக்குகாடு, மதுரை பைபாஸ் சாலை அருகே, அவர் வேலை பார்க்கும் பஞ்சர் பார்க்கப்படும் வாகனத்திலேயே மர்ம நபரால் தாக்கப்பட்டு இறந்துகிடந்துள்ளார்.
இதுகுறித்து தகவலறிந்த முத்தையாபுரம் காவல் நிலைய போலீசார் விரைந்து சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இச்சம்பவம் தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் சம்பவ இடத்தை பார்வையிட்டு, தூத்துக்குடி துணை காவல் கண்காணிப்பாளர் திரு. கணேஷ் மேற்பார்வையில், முத்தையாபுரம் காவல் நிலைய ஆய்வாளர் (பொறுப்பு) திரு. ஆனந்தராஜன் தலைமையில் தனிப்படை அமைத்து குற்றவாளியை விரைந்து கைது செய்ய உத்தரவிட்டுள்ளார்.
மேற்படி தனிப்படையினர் தூத்துக்குடி கேம்ப்-1, வடக்கு தெருவை சேர்ந்த ராமர் மகன் மாரீஸ்வரன் (37) என்பவரை இன்று தெர்மல் பவர் பிளான்ட் அருகே வைத்து கைது செய்து விசாரணை மேற்கொண்டதில், கொலையான மாரியப்பனும், மாரீஸ்வரனும் நண்பர்கள் என்பதும், மது அருந்திக்கொண்டு இருக்கும்போது அவர்களுக்குள் ஏற்பட்ட வாய்த்தகராறு காரணமாக, மாரீஸ்வரன், மாரியப்பனை இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்துள்ளது தெரியவந்துள்ளது.
சம்பவம் நடைபெற்ற 5 மணி நேரத்தில் மேற்படி எதிரிகளை விரைந்து கைது செய்த முத்தையாபுரம் காவல் நிலைய ஆய்வாளர் (பொறுப்பு) திரு. ஆனந்தராஜன் தலைமையிலான தனிப்படையினரை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் பாராட்டினார்.
http://34.68.197.11/36979/