தூத்துக்குடி: புதுக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பபட்ட புதுக்கோட்டை பாத்திமாநகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ஒடிசா மாநிலம் கஞ்சம் பகுதியை சேர்ந்த கந்தப் பெஹரா மகன் துஷாபந்த் பெஹரா 25. என்பவரை அடித்து கொலை செய்த வழக்கில் மேற்கு வங்க மாநிலம் காரக்பூர் பகுதியை சேர்ந்த சத்ய பிரகாஷ் பால் மகன் எர்னஸ்ட் பால் 42. என்பவரை புதுக்கோட்டை காவல் நிலைய போலீசார் கைது செய்தனர். மேற்படி இவ்வழக்கின் குற்றவாளி எர்னஸ்ட் பால் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க புதுக்கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. வின்சென்ட் அன்பரசி அவர்கள் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் அறிக்கை தாக்கல் செய்தார்.
மேற்படி காவல் ஆய்வாளரின் அறிக்கையின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன் அவர்கள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு பரிந்துரை செய்தார்.
அதன் பேரில் மாவட்ட ஆட்சியர் டாக்டர் திரு. கே. செந்தில்ராஜ் இ.ஆ.ப அவர்கள் மேற்கு வங்க மாநிலம் காரக்பூர் பகுதியை சேர்ந்த சத்ய பிரகாஷ் பால் மகன் எர்னஸ்ட் பால் என்பவரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். அவரது உத்தரவின் பேரில் புதுக்கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. வின்சென்ட் அன்பரசி குற்றவாளி எர்னஸ்ட் பாலை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தார்.
இந்த ஆண்டு இதுவரை போக்சோ வழக்குகளில் சம்மந்தப்பட்ட 14 குற்றவாளிகள் மற்றும் போதை பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்ட 42 குற்றவாளிகள் உட்பட 251 குற்றவாளிகள் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ளனர்.