ராஜஸ்தான் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள மீனா காலனி பகுதியில் வசித்து வருபவர் 108 வயது மூதாட்டி ஜமுனா தேவி. இவர் தனது மகள் மற்றும் பேத்திகளுடன் வசித்து வருகிறார். கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று வீட்டு திண்ணை பகுதியில் ஜமுனா தேவி உறங்கி கொண்டிருந்தார். அப்போது அதிகாலை 5.30 மணி அளவில் அடையாளம் தெரியாத சில நபர்கள் ஜமுனா தேவியை வீட்டில் இருந்து தூக்கி வெளியே வலுக்கட்டாயமாக இழுத்து வந்துள்ளனர். வீட்டின் வெளிப்புறம் உள்ள கழிப்பறையில் வைத்து ஜமுனா தேவியை தாக்கி அவரின் கால் பாதத்தை வெட்டி அறுத்து அவரின் வெள்ளி கொலுசை திருடிச் சென்றுள்ளனர்.
சிறிது நேரத்தில் அம்மாவை காணவில்லையே என்று ஜமுனா தேவியின் மகள் கோவிந்தி தேவி வீட்டின் அறைகளில் தேடியுள்ளார். பின்னர் வாசலில் வந்து பார்த்தபோது தான் தாய் ஜமுனா பாதங்கள் வெட்டப்பட்ட நிலையில் இருந்ததை பார்த்து அதிர்ச்சியில் உறைந்துள்ளார். பின்னர், வீட்டினர் ஜமுனா தேவியை அருகே உள்ள சவாய் மன் சிங் என்ற தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். சம்பவம் தொடர்பாக காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. காவல்துறையினர் மூதாட்டியிடம் வாக்குமூலம் பெற்றதுடன் சம்பவயிடத்திற்கு வந்து தடயங்களை சேகரித்துள்ளார். அத்துடன் சிசிடிவி காட்சிகளின் அடையாளத்தை வைத்து கொள்ளையர்களை தேடும் நடவடிக்கையில் காவல்துறை களமிறங்கியுள்ளது. வெள்ளி கொலுசுக்காக 108 வயது மூதாட்டியின் பாதம் அறுக்கப்பட்ட சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.