தூத்துக்குடி : தூத்துக்குடியில் டூவிபுரம் மற்றும் தாமோதரநகர், மேல சண்முகபுரம் ஆகிய பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்று அதிகமாக இருப்பதால் மாவட்ட நிர்வாகம் அப்பகுதிகளை கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக (Containment Zone) அறிவிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
இன்று காலை (22.07.2020) தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் கட்டுப்படுத்தப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளான டூவிபுரம் மற்றும் தாமோதரநகர், மேலசண்முகபுரம் ஆகிய பகுதிகளை நேரில் சென்று ஆய்வு செய்தார்.
மேலும் பொதுமக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், அதை எதிர்கொள்ளவதற்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வழிமுறைகள் குறித்தும் விழிப்புணர்வு தொடர்ந்து ஏற்படுத்திக்கொண்டு இருக்குமாறு காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினருக்கு அறிவுரைகள் வழங்கினார்.
மேலும் தூத்துக்குடி நகரின் முக்கிய சந்திப்பான குரூஸ்பர்னாந்து சிலை சந்திப்பில் பொதுமக்களுக்கு கபசுரக்குடிநீர் வழங்கினார். அப்போது அவர் தெரிவித்ததாவது இப்பகுதிகளில் உள்ள மக்கள் தேவையில்லாமல் வெளியே வரவேண்டாம். அத்தியாவசியத் தேவைகளை பெறுவதற்கு மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி சார்பில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. இப்பகுதி மக்கள் கட்டுப்படுத்தப்பட்டு, தனிமைப்படுத்தப்படுவதால் இந்த கொரோனா வைரஸ் தொற்று மற்றவர்களுக்கு பரவாமல் பாதுகாக்க முடியும் என்றும்,
கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருப்பதற்கு கட்டாயமாக முகக் கவசம் அணிய வேண்டும், சோப்பு மற்றும் கிருமி நாசினி கொண்டு அடிக்கடி கைகளை சுத்தம் செய்தல், சமூக இடைவெளிக் கடைபிடிக்க வேண்டும் எனவும், கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள கபசுரக்குடிநீர், ஆர்சானிக் ஆல்பம் மாத்திரைகள் போன்றவைகளை சாப்பிடுதல் போன்றவற்றையும் வலியுத்தி பேசினார். மேலும் இந்த தொற்றிலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
இந்த ஆய்வின்போது தூத்துக்குடி நகர காவல் துணை கண்காணிப்பாளர் திரு. கணேஷ், மத்தியபாகம் காவல் ஆய்வாளர் திரு. ஜெயப்பிரகாஷ், தென்பாகம் காவல் ஆய்வாளர் திரு. கிருஷ்ணகுமார், உதவி ஆய்வாளர்கள் மற்றும் மற்றும் காவல்துறையினர் உடனிருந்தனர்.