சென்னை: கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுப்பதற்காக தமிழக அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளின்படி, கொரோனா தொற்று பரவாமல் தடுக்கும் வழிகாட்டுதல் நெறிமுறைகளை கடைபிடிக்க சென்னை பெருநகர காவல் ஆணையாளர் உத்தரவின்பேரில், பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும், கொரோனா மூன்றாவது அலை வராமல் தடுக்க, பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் திரு.ககன்தீப் சிங், இ.ஆ.ப., மற்றும் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., தலைமையில், காவல் அதிகாரிகள் மற்றும் மாநகராட்சி, அதிகாரிகள் இணைந்து கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில், சென்னை பெருநகரின் காவல்துறை மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் இணைந்து சென்னை பெருநகரில் தீவிரமாக கண்காணித்து, தமிழக அரசின் கொரோனா தடுப்பு வழிகாட்டுதல் நெறிமுறைகளான முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி கடைபிடித்தல் ஆகியவற்றை பொதுமக்கள் கடைபிடிக்க வலியுறுத்த முடிவெடுக்கப்பட்டது.
