சென்னை : சென்னை போலீசில் ஏற்கனவே கொரோனா கொடூர தாக்குதலுக்கு மாம்பலம் சட்டம்- ஒழுங்கு இன்ஸ்பெக்டராக பணியாற்றிய பாலமுரளி முதல் பலியானார். மேலும் சென்னையில் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட மொத்தம் 5 போலீசார் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு இறந்துள்ளனர்.
இந்த நிலையில் நேற்று மாலை மேலும் ஒரு இன்ஸ்பெக்டர் கொரோனாவால் உயிரிழந்துள்ளார். அவர் பெயர் ஜொனாதன் பிரான்சிஸ் (வயது 53). இவர் சென்னை அடையார் மருதம் வளாகத்தில் உள்ள கமாண்டோ பயிற்சி பள்ளியில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார்.
கடந்த வாரம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். நேற்று மாலை சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்து போனார்.
இவர் 1988-ம் ஆண்டு தமிழக போலீசில் வேலைக்கு சேர்ந்தார். இவர் குடும்பத்தோடு பள்ளிக்கரணை சந்தோஷ்நகரில் வசித்து வந்தார். இவர் மனைவி பெயர் ஷியாமளா. இவர் பள்ளிக்கூட ஆசிரியை. இவருக்கு கென்னட்(25), கெவின்(22) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். கென்னட் தனியார் கம்பெனியில் பணியாற்றுகிறார். கெவின் கல்லூரி ஒன்றில் இறுதி ஆண்டு படித்து வருகிறார்.
சுகாதாரத்துறை அதிகாரிகள் வழிகாட்டுதல்படி ஜொனாதன் பிரான்சிஸ் உடல் அடக்க ஏற்பாடுகள் நடைபெற்றது. தற்போது சென்னை காவல்துறையில் கொரோனாவுக்கு 6 பேர் பலியாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.