தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டத்தில், போதை பொருட்கள் விற்பனை மற்றும் கடத்தலை தடுக்கும் பொருட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன், அவர்கள் உத்தரவுபடி காவல்துறையினரால் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து கொரியர் மற்றும் டிராவல்ஸ் ஏஜென்சி உரிமையாளர்கள் மற்றும் மேலாளர்களுக்கான போதை பொருள் கடத்தல் தடுப்பு சம்பந்தமான விழிப்புணர்வு கூட்டம் (01.10.2022), மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு கூட்டத்தில் கொரியர் மற்றும் டிராவல்ஸ் மூலம் சந்தேகத்திற்கிடமாக பார்சல்கள் ஏதேனும் வருகிறதா எனவும், அதில் கஞ்சா புகையிலை போன்ற போதை பொருட்கள் இருப்பது தெரியவந்தால் பார்சல் அனுப்புபவர் மற்றும் பெறுபவர்களின் விபரங்களை உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அதே போன்று தங்கள் நிறுவனங்களின் மூலம் அனுப்பப்படும் பார்சல்கள் சந்தேகத்திற்கிடமாக இருந்தாலும் அனுப்புபவரின் விவரங்களை காவல்துறைக்கு தெரிவிப்பதன் மூலம் சட்டவிரோதமாக போதை பொருள்களை கடத்துவதை தவிர்ப்பதற்கு வாய்ப்பு கிடைக்கும்.
மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா புகையிலை போன்ற போதைப் பொருட்களை முற்றிலும் ஒழிப்பதற்காக தனியாக அறிவிக்கப்பட்டுள்ள 83000 14567 மற்றும் 95141 44100 ஆகிய எண்களை தொடர்புகொண்டு காவல்துறைக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கலாம். அதே போன்று பொதுமக்களும் மேற்படி எண்களுக்கு தகவல் தெரிவித்து தூத்துக்குடி மாவட்டத்தை போதைப் பொருள் இல்லாத மாவட்டமாகவும், குற்றமில்லாத மாவட்டமாகவும் உருவாக்குவதற்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு தருமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தெரிவித்துள்ளார். இந்த கூட்டத்தில் காவல் துணை கண்காணிப்பாளர்கள் சாத்தான்குளம் திரு. அருள், திருச்செந்தூர் திரு. ஆவுடையப்பன், மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு திரு. சிவசுப்பு, மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் திரு. பேச்சிமுத்து, காவல் கட்டுப்பாட்டு அறை காவல் ஆய்வாளர் திரு. ரேனியஸ் ஜேசுபாதம், மற்றும் கொரியர் சர்வீஸ் மற்றும் டிராவல்ஸ் ஏஜென்சி உரிமையாளர்கள் மற்றும் மேலாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.