காஞ்சி: காஞ்சிபுரம் மாவட்டம் காவல் அலுவலகத்தில் இன்று (09.02.22) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.திரு.M.சுதாகர் அவர்கள், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (தலைமையகம்) திரு.வினோத் சாந்தாராம், அமைச்சு பணியாளர்கள் மற்றும் காவல் ஆளினர்கள் இணைந்து கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதி மொழியை பின்வருமாறு எடுத்துக் கொண்டனர்.
கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி
இந்திய அரசமைப்புச் சட்டத்தின்படி மனிதனை வணிகப் பொருளாக்குதலும், வலுக்கட்டாயமாக வேலை சுமத்தும் வழக்கங்களும், கடன் பிணையத் தொகை வழங்கி கட்டாயப் பணிக்கு வற்புறுத்துவதும் தண்டனைக்குரிய குற்றமாக வரையறை செய்யப்பட்டுள்ளதால், கொத்தடிமைத் தொழிலாளர் முறையை முற்றிலும் ஒழித்திடும் நோக்கத்தை கருத்திற்கொண்டு, சமுதாயத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்துவேன் என்றும், எந்தத் தொழிற்சாலையிலும் தொழிலாளர்களுக்கு முன்பணம் கொடுத்து பணியமர்த்துவதைத் தவிர்க்க வலியுறுத்துவேன் என்றும்,
கொத்தடிமைத் தொழிலாளர்களை மீட்டு அவர்களின் முழுமையான மறுவாழ்விற்காகப் பணியாற்றுவேன் என்றும், இந்திய அரசமைப்புச் சட்டம் வகைசெய்துள்ள அடிப்படை உரிமைகளை அனைவருக்கும் உரித்தாக்குவதற்கு, கொத்தடிமைத் தொழிலாளர்முறை ஒழிப்புச் சட்டத்தைச் சீரிய முறையில் செயற்படுத்த உறுதுணையாக இருந்து கொத்தடிமைத் தொழிலாளர் இல்லாத மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்குவதற்கு சிறப்புடன் செயற்படுவேன் என்றும் நான் உளமார உறுதி கூறுகிறேன்.
காஞ்சிபுரத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.ராஜ் கமல்