மதுரை: திருமங்கலத்தில் நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய வந்தபோது, கைதிகளுக்கு டீயில் போதை மாத்திரை கலந்து கொடுத்தது தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருநகர் அருகே நிலையூரில் நடந்த பெண் கொலை வழக்கு தொடர்பாக, அழகுசேது, அஜய், சதீஷ் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். இவர்களை ஆஸ்டின்பட்டி போலீசார் திருமங்கலம் மாஜிஸ்திரேட்டு முன்பு ஆஜர்படுத்த அழைத்துச் சென்றனர். வழியில் அவர்களுக்கு டீ வாங்கிக் கொடுக்கப்பட்டது. அப்போது அவர்களை பார்க்க துவரிமான் கீழத்தெருவை சேர்ந்த பிரேம்குமார்(22), நிலையூர் சரஸ்வதி நகரை சேர்ந்த அழகுகோபி(20) ஆகியோர் வந்தனர்.
இவர்கள், அழகுசேது உள்பட 3 பேருக்கும் போதை மாத்திரை வழங்கியதாக கூறப்படுகிறது. இதைப் பார்த்த போலீசார் உடனடியாக போதை மாத்திரைகளை வழங்கிய பிரேம்குமார், அழகுகோபி ஆகிய 2 பேரையும் பிடித்து விசாரித்தனர். பின்னர் போலீசார் அவர்களை கைது செய்து திருமங்கலம் நகர் போலீசில் ஒப்படைத்தனர்.
அவர்களிடம் இருந்த போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த போதை மாத்திரைகள் இரண்டு பேருக்கும் எப்படி கிடைத்தது என்று போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் கைதான அழகுகோபி மதுரையில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி