தூத்துக்குடி: குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை காவல் துறை இயக்குநர் முனைவர் திரு. பிரதீப் வி பிலிப், இ.கா.ப., அவர்கள் தலைமையில், சென்னை கோட்டம் காவல் கண்காணிப்பாளர் திருமதி. சாந்தி இ.கா.ப., அவர்களின் நேரடி மேற்பார்வையில், தமிழகம் முழுவதும், Know Your Criminals (KYC) அடிப்படையில் குற்றவாளிகளின் தகவல்களை சேகரித்து சிறப்பு அதிரடி சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. கடந்த வாரம் DGP டாக்டர். பிரதீப் வி பிலிப், IPS தலைமையிலான தனிப்படையினரால் 50 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு ரேஷன் அரிசி ஒரு கும்பல் கடத்த திட்டமிட்டு வருவதாக உணவு கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினருக்கு, ரகசிய தகவல் கிடத்துள்ளது. கிடைக்கப்பட்ட தகவலின் கீழ் காவல் ஆய்வாளர் திருமதி.செல்வி மற்றும் உதவி ஆய்வாளர் திரு.வேல்ராஜ் மற்றும் திரு.பால்மணி தலைமையில் ஏட்டுக்கள் திரு.நாகராஜன், திரு.காளி ஆகியோருடன் புன்னக்காயல் பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். அந்த வழியே வந்த ஒரு லாரி மற்றும் ஒரு லோடு ஆட்டோவை சந்தேகத்தின் பெயரில் மடக்கி பிடித்து சோதனையிட்டனர். சோதனையில் வண்டி முழுவதும் ரேஷன் அரிசி மூட்டைகள் இருப்பது தெரியவந்தது .
அதன்பின் வண்டியை முழுமையாக சோதனையிட்ட போது 189 – மூடைகள் கணக்கிடப்பட்டது. இதன் மொத்த எடை 8.50. டன் என்பதும் கண்டறியப்பட்டது. கடத்தி வரப்பட்ட அரிசி மூடைகளையும், லாரியையும், ஆட்டோவையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். சட்டவிரோதமாக ரேஷன் அரிசியை பதுக்கி வைத்து, கடத்த முயன்ற கும்பலை காவல்துறையினர் கைது செய்தனர்.
இதில் தூத்துக்குடி சவேரியார்புரத்தை சார்ந்த ஜாண் கென்னடி (41), தொம்மை ஆரோக்கியம் (44), மற்றும் பிரையன்நகர் 8- வது தெருவை சார்ந்த சுதாகர் (38) , காந்தி நகரை சேர்ந்த செல்வம் (42), புதுக்கோட்டை அய்யனார் காலணியை சார்ந்த ராஜா (39), கேரளா மாநிலம் எரிமேலியை சேர்ந்த டிரைவர்கள் ராகுல் (24) , பாதுஷா (23) ஆகிய 7 – பேரை கைது செய்தனர்.
இவர்களிடம் நடத்திய விசாரணையில் தூத்துக்குடியில் ரேஷன் அரிசியை பதுக்கி வைத்து கேரளா மாநிலம் எரிமேலிக்கு கடத்த முயன்றுள்ளதாக தெரியவந்தது. இதில் தப்பி ஓடிய லோடு ஆட்டோ உரிமையாளர் அன்பு மற்றும் கேரளாவை சேர்ந்த லாரி உரிமையாளர் நஷீம் ஆகிய இருவரையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
கைது செய்யபட்டுள்ள இந்த 7 – பேரில் பிரையண்ட் நகர் சுதாகர் மீது ஏற்கனவே ரேஷன் அரிசி கடத்தியதாக 3 – வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நிலுவையில் உள்ளது. கைது செய்யப்பட்ட 7 – நபர்களையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி பேரூரணி சிறைச்சாலையில் அடைத்தனர்.
ரேஷன் அரிசி கடத்தும் சட்ட விரோத கும்பல் மீது தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்டு வரும் தூத்துக்குடி உணவு கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினருக்கு பொதுமக்கள் நன்றியும் வாழ்த்துக்களும் கூறி வருகின்றனர்.